Friday, June 03, 2016

விகடன் - தடம் - ஒரு பார்வை



நவீன இலக்கிய தமிழ் சிற்றிதழ்களின் வரலாறு சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' இதழிலிருந்து துவங்குகிறது. அதற்கு முன்பாகவே இங்கு சிற்றிதழ் மரபை உருவாக்கிய மணிக்கொடி ஓர் இயக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தாலும் அது சிற்றிதழ்களின் தீவிரமான கூறுகளை அல்லாமல் சுதந்திரப் போராட்டத்தின் விஷயங்களையும் தினஇதழின் தன்மையையும் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

பொதுவாகவே சிற்றிதழ்கள் என்பது தனிநபர்களின் தியாகத்தினாலும் அவர்களின் சுயாதீன முயற்சியாலும் இலக்கிய ஆர்வத்தினாலுமே துவங்கி இயக்கப்பட்டன. தொடர்ந்து இயங்குவதற்கான நிதிச்சுமையை தாங்க முடியாமல் பல சிற்றிதழ்கள் அற்பாயுளில் மறைந்தன. இலக்கிய ரசனை பெரிதும் அற்ற சூழல் காரணமாக இவைகளின் மறைவு ஒருவகையில் நம் கலாசார பலவீனத்தை சுட்டுகிறது என்றாலும் இன்னொரு வகையில் சிற்றிதழ்களின் கம்பீரமான அடையாளங்களுள் இதுவும் ஒன்று எனலாம். ஏனெனில் நேர்மையான நோக்கத்துடன் துவங்கப்படும் ஓர் இலக்கிய இதழ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமெனில் பல்வகையான சமரசங்களுக்கும் அரசியலுக்கும் இடங்கொடுத்து தம்மை ஒரு நிறுவனமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வகையான சமரசங்களுக்கு இடம் தராத காரணத்தினாலேயே பல இதழ்கள் மறைந்து போயின.

வெகுசன இதழ்கள் முன்வைக்கும் மலினமான ரசனைக்கு எதிர்திசையில் இந்த சிற்றிதழ்கள் இயங்கின. இந்த இருவிதமான பத்திரிகைகளுக்கும் இடையே துல்லியமான வேறுபாடும் அடையாளமும் இருந்தது. இவை சமயங்களில் பரஸ்பரம் நேரடியாகவும் மறைமுகமாவும் கிண்டலடித்துக் கொண்டன. உலக அளவில் நிகழும் இலக்கியப் போக்குகள், சிறந்த எழுத்தாளர்கள், தமிழில் உருவாகும் நல்ல எழுத்துக்கள் ஆகியவற்றை இந்த சிற்றிதழ்கள் அடையாளப்படுத்தின. இவற்றினுள் குழு அரசியலும் குடுமிப்பிடி சண்டைகளும் இருந்தன. Polemics எனப்படும் இவ்வகையான இலக்கிய பூசல்கள் இலக்கியம் வளரவும் ஒருவகையில் காரணமாக இருந்தது. இவ்வகையான பூசல்களை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் உள்நுழையும் ஓர் இளம் வாசகன் மெல்ல நல்ல இலக்கியத்தின் பால் கவரப்படும் ஆரோக்கியமான விபத்தும் நிகழ்ந்தது.

()


தங்களின் வணிக சந்தையை விஸ்தரிப்பது உட்பட்ட பல காரணங்களுக்காக ஐரோப்பியர்கள் உலகமெங்கிலும் அதற்கான வாய்ப்புகளை தேடத் துவங்கியதைப் போல, இலக்கிய வாசகர்கள் எனும் குறுகிய சந்தையையும் ஏன் விட்டு வைப்பானேன் என்று இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றும் முயற்சியில்தான் இடைநிலை இதழ்கள் துவங்கப்பட்டதோ என்னும் பொதுவான சந்தேகம் எனக்குண்டு. சில உண்மையான விதிவிலக்குகள்  இதில் சேர்த்தியில்லை. இந்தியா டுடே போல உயர்ரசனையுள்ள வாசகர்களை குறிவைத்து துவங்கப்பட்ட குமுதம் ஜங்ஷன் போன்ற முயற்சிகள் ஆதரவில்லாமல் துவக்கத்திலேயே மறைந்தன.

அனுராதா ரமணனைக் கொண்டு மகளிர் பத்திரிகையாக துவங்கப்பட்ட 'சுபமங்களா' பின்னர் கோமல் சுவாமிநாதனை ஆசியரராக கொண்டு இலக்கியப் பத்திரிகையாக மலர்ந்தது. இடைநிலை இதழ்களின் துல்லியமான முன்னோடி என்று சுபமங்களாவை சொல்லலாம். சுஜாதா உள்ளிட்ட பலரின் நீண்ட நேர்காணல்கள் அவர்களின் அழகான புகைப்படங்களுடன் இதில் இடம்பெற்றன. இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களின் வடிவம் மேம்பட்டது இதற்குப் பிறகுதான். 'கலைஞர் முதல் கலாப்ரியா வரை' என்று இந்த நேர்காணல்களின் தொகுப்பு நூலாக வெளிவந்தது. சுவாமிநாதனின் மறைவிற்குப் பிறகு இதழ் நின்று போனது. இதைப் போலவே பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'புதிய பார்வையும் ஒரு நல்ல இடைநிலை இதழாக அறியப்பட்டது. பல இதழ்களுக்குப் பிறகு அதன் முதலாளியே ஆசிரியராக ஆன அவலம் நிகழ்ந்த பின்னால் பத்திரிகையின் உள்ளடக்கம் சீரழிந்தது. இதைப் போலவே பல வருடங்களாக வந்து கொண்டிருந்த கணையாழியும் இந்த இடைநிலை இதழ்களின் வரிசையில் அதன் பாரம்பரிய அடையாளத்தை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து சென்று விட்டது.

()

உலகமயமாக்கலின் விளைவு இலக்கிய இதழ்களின் வரலாற்றிலும் எதிரொலித்தது. இலக்கிய எழுத்தாளர்களுக்கும் வெகுசன இதழ்களுக்கும் இடையே நின்றிருந்த  சுவர் மெல்ல கரையத் துவங்கியது. அதுவரை தீபாவளி மலர்களில் மட்டுமே இடம் பெற்றுக் கொண்டிருந்த இலக்கிய எழுத்தாளர்கள், வெகுசன இதழ்களிலும் பத்தி எழுத்து உள்ளிட்ட பலவற்றை எழுதத் துவங்கினார்கள். நுட்ப வசதிகள் இன்னமும் எளிமையானதால் பல இடைநிலை இதழ்கள் புதிதாக தோன்றின. ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த காலச்சுவடு இதழோடு உயிர்மை. உயிர்எழுத்து உள்ளிட்ட பல இதழ்கள் உருவாகின. இணையத்தில் தமிழ் சற்று பரவலான பயன்பாட்டை அடைந்தவுடன் இணைய இதழ்களும் வெளிவரத் துவங்கின


()


இந்த நிலையில் விகடன் குழுமத்திலிருந்து 'தடம்' என்கிற பிரத்யேகமான இலக்கிய இதழ் உருவாகியுள்ளது. முதல் இதழை வைத்தே இதன் போக்கை இப்போதே தீர்மானிக்க முடியாது என்றாலும் இதை இடைநிலை இதழ் என்று இப்போதைக்கு வகைப்படுத்திக் கொள்ளலாம். சற்று மேம்பட்ட வடிவத்தில் உள்ள இடைநிலை இதழ்.

அருமையான வடிவமைப்பு, ஒவியங்களுக்காக தாராளமாக இடம் செலவழிக்கப்பட்ட நேர்த்தியுடன் உருவாகியுள்ளது. ஜெயமோகன் போன்ற படைப்பாளி முதற்கொண்டு அதிஷா போன்ற இளம் எழுத்தாளர்கள் வரையான பங்களிப்பு இதன் ஜனநாயகத்தன்மையை உணர்த்த முயல்கிறது.

வாசித்த வரையில் தமிழ் சிறுகதையின் வரலாறு குறித்து அதன் துவக்கத்திலிருந்து சமகால குறுங்கதைகள் வரை ஒரு பறவைப் பார்வையில் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரை அருமை. இளம் வாசகர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதன் விடுபடல்கள் குறித்த சர்ச்சைகள் ஏற்படலாம். ஒரு நூலாக எழுதப்பட வேண்டிய விஷயத்தை சில பக்கங்களில் குறுக்க நேரும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியாது. 'இந்தியாவில் சாதிகள்' எனும் அம்பேத்கரின் நூலின் சாரத்தை சுகுணா திவாகர் எழுதியிருக்கும் விதமும் அருமை.

சர்வதேச தரத்திலுள்ள திரைப் படைப்பாளிகள், சினிமாக்கள் ஆகியவற்றை மட்டுமெ உரையாடிக் கொண்டு தமிழ் சினிமாவை 'நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல' புறக்கணித்துக் கொண்டிருந்த அல்லது அதை அவல நகைச்சுவையாக அணுகிக் கொண்டிருந்த இலக்கிய இதழ்கள், வெகுசன ரசனையின் உளவியலை ஆராயும் பொருட்டு தமிழ் சினிமாக்களை பரவலாக உரையாடத் துவங்கியது இடைநிலை இதழ்களின் வருகைக்குப் பிறகுதான். அந்த வகையில் வடிவேலு எனும் நகைச்சுவை ஆளுமையைப் பற்றி சுபகுணராஜன் எழுதியிருக்கும் கட்டுரை கவனிக்கத்தக்கது.

()

இதன் வடிவமைப்பு நேர்த்தியாகத்  தோன்றும் அதே சமயத்தில் அசெளகரியமாகத் தோன்றும் முரணையும் சொல்ல வேண்டும். இது வெகுசன இதழின் முகாமலிருந்து வெளிவருவதால் அதன் வாசகர்களின் மனோபாவத்தை திருப்திப்படுத்த வேண்டிய விஷயங்களை, சமரசங்களை தன்னிச்சையாக இதிலும் கடத்தியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. போதுமான இடைவெளிகளுடன் படங்களுடன் சுருக்கமாக எழுதப்பட்ட பதிவுகளைத்தான் வெகுசன வாசகர்கள் விரும்புவார்கள். படங்கள் அற்ற நீண்ட கட்டுரைகளுக்கு அங்கு இடமில்லை. அந்த வடிவமைப்பை இங்கும் செய்திருக்க வேண்டுமா? இலக்கிய விஷயங்களை நாடும் வாசகனுக்கு இது போன்ற ஜாலங்கள் தேவையில்லை. படைப்பின் உள்ளடக்கம் மட்டுமே போதுமானது. நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட அட்டையிலிருந்தே கட்டுரைகள் துவங்கும் சிற்றிதழ்களை வாசித்தவனுக்கு இந்த ஆடம்பரம் அசெளகரியமாகவும் நெருடலாகவும் தோன்றலாம், கவிஞர் விக்கிரமாதித்யனை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்ப்பது போல. அவரை தெருவொர தேநீர்க்கடையிலோ அல்லது கள்ளுக்கடையின் பின்னணயிலோ பார்ப்பதுதானே அழகு?

இதைப் போலவே இதன் விலையும். ரூ.50/- என்பது சாமானியனை சற்று தயங்க வைக்கும் விலை. இதன் தேவையற்ற ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு விலையை சற்று குறைத்தால் நல்லது. விகடன் போன்றே வெகுசன முகாமில் இருந்து பல வருடங்களாக வரும் 'குமுதம்' தீராநதி நல்ல உதாரணம். பொதுவாக இலக்கியம் என்பது அடுத்த வேளை சோற்றுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமுள்ள சமூகத்தால் எழுதப்பட்டு, வாசிக்கப்படுவது என்றாலும் அது சாமானியனை நோக்கி நகர வேண்டும் என்பதுதானே ஆக்கப்பூர்வமான சிந்தனையாக இருக்க முடியும்? விகடன் குழுமத்திலிருந்து இது வெளிவருவதால் அந்த அடையாளத்தினால் கவரப்பட்டு விகடன் வாசகர்களும் இலக்கியப் பரப்பை நோக்கி வரும் சாத்தியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது 'தடம்'


'தடம்' வெற்றிப் பயணத்தின் தடத்தில் பல வருடங்கள் கடந்து செல்ல வாழ்த்துகள்.


suresh kannan

No comments: