Friday, January 22, 2016

இந்திய சினிமா நூல் - என்னுரை




 'இந்திய சினிமா - வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை' என்கிற புதிய நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை.

கீழ்கண்ட சுட்டியில் நூல் பற்றிய விவரங்கள் உள்ளன.

http://www.nhm.in/shop/9789384149635.html 

பொங்கல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு ஸ்டால் எண் 107-ல் இப்புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும். 


 ***

'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு' என்கிற பெருமைமிகு அடையாளத்துடன் அறியப்பட்டாலும் இந்தியா என்பது பல்வேறு  பிரதேசங்களை மூட்டையாக கட்டி உருவாக்கப்பட்ட ஒரு பொட்டலம். பல்வேறு பண்பாட்டு வாழ்வுமுறைகள், கலாசாரங்கள், முரண்பாடுகள் போன்றவற்றைக் கொண்ட ஒரு கூட்டுக்குடும்பம். எனவே அந்த அமைப்பிற்கேயுடைய பரஸ்பர வெறுப்புகளும் விவாதங்களும் சர்ச்சைகளும் இடைவெளிகளும் இங்குண்டு. பகைமை தேசங்களுடன் கிரிக்கெட் போட்டியில் வெற்றி கொள்ள வேண்டிய வெறி, அந்நிய நாட்டுச் சதிகளினால் ஏற்படும் வன்முறை போன்ற சமயங்களில் மட்டுமே 'இந்தியன்' என்று உணர்வு கொள்கிற தருணங்கள் மற்ற சமயங்களில் அவரவர்களின் பிரதேச  அரசியல் சார்புடன் சுருங்கிப் போகிற தன்மையே பொதுவாக இங்குண்டு. அரிதான சமயங்களில் தேசிய கீதமான 'ஜனகனமண'வை மயிர்க்கூச்செறிய உணர்வுபூர்வமாக நெருக்கம் காட்டும் ஒரு சராசரி மனதிற்கு இந்தியா என்கிற பிரம்மாண்டமான தேசத்தில் எத்தனை மாநிலங்கள் உள்ளன, மொழிகள் பேசப்படுகின்றன என்கிற அடிப்படையான தகவல்கள் கூட தெரிந்திருப்பதில்லை. இப்படி பல வேற்றுமைகளுடன் ஆனால் கட்டுப்பட்ட தொகுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதே இந்தியாவின் பலமும் பலவீனமும்.

இந்த வேற்றுமைகளில் ஆகப்பெரியது கலாச்சார இடைவெளி. மற்ற பிரதேசங்களிலுள்ள கீழ்மைகளை அவற்றின்  மீதான கிண்டல்களை தேடி ரசித்து பரஸ்பர வெறுப்புகளை வளர்த்துக் கொள்வதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், பரந்த மனதோடு அவற்றின் கலாசார பெருமைகளை, பண்பாட்டு உயர்வுகளை, படைப்பிலக்கியங்களை அறிந்து கொள்வதில் பெரும்பாலும் இருப்பதில்லை.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைக் கூட தேடி வாசித்து சிலாகிப்பவர்களுக்கு தமது தேசத்தின் அண்டை மாநிலத்து படைப்பாளிகளைப் பற்றிய அடிப்படை அறிமுகம் கூட இருப்பதில்லை. இதைப் போலவேதான் திரைப்படங்களும். சமீபத்திய நுட்ப வளர்ச்சியால் இணையத்தின் மூலமும் குறுந்தகடுகள் மூலமும் எங்கோ பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலுள்ள ஒரு சிறிய நாட்டின் திரைப்படத்தைக் கூட காண முடிகிற போது நமக்கு மிக அருகாமையிலுள்ள அண்டை மாநிலங்களின் திரைப்படங்கள் காணக் கிடைக்காதது ஒரு முரண்நகை. அவற்றைக் காண்பதற்கான ஆவலும்  தேடலும் பெரும்பாலும் இல்லை என்பதும் ஓர் உபகாரணம்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில வாரியாக சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அவைகளில் பல திரைப்படங்களை எவருமே பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே கசப்பான உண்மை. அதிலும் மணிப்புரி, கொங்கணி போன்ற திரைப்படங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்க கூட மாட்டார்கள். லோக்சபா என்கிற அரசு தொலைக்காட்சியில் இவ்வாறான மாநில விருது பெற்ற திரைப்படங்களை ஒவ்வொரு வாரமும் சனி இரவன்றும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைக் காண்பது மிக சொற்பமான நபர்கள்தான்.   இதைப் போலவே சாகித்ய அகாதமி என்கிற அமைப்பும் இந்தியாவிலுள்ள மாநில வாரியான சிறந்த எழுத்து இலக்கியத்தை மற்ற மாநில மொழிகளில் மொழிபெயர்த்து இலக்கிய அறிமுகங்களை செய்து வருகிறார்கள். இவ்வாறான பரஸ்பர கலை,இலக்கியப் பரிமாற்ற அறிமுகங்களின் மூலம்தான் மேற்குறிப்பிட்ட கலாசார இடைவெளிகளை நாம் தாண்டி வர முடியும். அப்போதுதான் இந்திய தேசம் என்பதற்கான அரசியல் ரீதியான பொருள் இன்னமும் துலக்கமாகும்.


***

இந்த நூலில் தமிழ்  அல்லாத மற்ற மாநிலத் திரைப்படங்கள் பற்றிய சில அறிமுகக் கட்டுரைகள் உள்ளன. கலாசார இடைவெளியை கடந்து வருவதற்கான சிறுமுயற்சியே இந்த நூல். இவைகளில் பெரும்பாலானவை என்னுடைய வலைப்பதிவில் [http://pitchaipathiram.blogspot.in] வெளியிடப்பட்டன. இன்னும் சில கட்டுரைகள் உயிர்மை, அம்ருதா, காட்சிப்பிழை ஆகிய இதழ்களில் வெளியாகின. தொடர்புள்ள பத்திரிகைகளுக்கு நன்றி. இந்த நூலை பதிப்பிக்க முன்வந்த கிழக்கு பதிப்பகத்தினருக்கும், குறிப்பாக இந்த முயற்சியை முன்னெடுத்த நண்பர் ஹரன் பிரசன்னாவிற்கும் என் மனப்பூர்வமான நன்றி. 

suresh kannan

1 comment:

Albe said...

Sir,

It is a pleasure writing to you. Since I could not find a way to write to you I am sharing my message to you via this comment section.

Please view our short film Kathal Virodhi

- https://www.youtube.com/watch?v=LpbRe-_hm98

Please do write your comments as a film critic after viewing it.

thanks you
Albe