Saturday, July 04, 2015

உத்தம வில்லன் - மரணத்தின் கலை



திரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண்ட தனிமையான அறிவுஜீவிகளில் அவர் ஒருவர் எனச் சொல்லலாம். ஆனால் வணிக யதார்த்தத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிற, அதற்குள் தாக்குப் பிடிக்கிற காரியக்கார அறிவுஜீவி.
 
1976-ல் அவரைச் சந்தித்த ஒரு கணத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா இப்படியாக விவரிக்கிறார்:
'கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸ்யமாக வெளிப்பட்டது. இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி. அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப் பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாழி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள  சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார். போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றி அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது.

"மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன். அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன". தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார். "எனக்கு அழ வரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று. பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால், சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

கலை சார்ந்த ஐரோப்பியச் சினிமாக்களின் உன்னதங்களுக்கும் வணிக நோக்கு  இந்தியச் சினிமாக்களின் அபத்தங்களுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை  தம் இளம் வயதிலேயே மிகத் தெளிவாக உணர்ந்திருந்த கமல்ஹாசன் தமது அறுபதாவது வயது வரை கூட பெரும்பாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவின் சகதியிலேயே உழல வேண்டியிருக்கும் மனஉளைச்சலைச் சற்று கற்பனை செய்து பார்க்கலாம். இது ஏறத்தாழ பெரும்பாலான இந்தியர்களுக்கு நிகழ்வதுதான். இளம் வயதில் அடைய வேண்டிய  கனவு ஒன்றாக இருககும். வேறு வழியில்லாமல் விழ வேண்டிய யதார்த்தம் வேறாக இருக்கும். கானல் நதி போலத் தெரியும் அந்தக் கனவுகளை இறுதிவரைக்கும் கூட அடைய முடியாத சோகம்தான் வாழ்நாளின் மிச்சமாக கூட இருக்கும். சாதாரணர்களுக்கே இந்த உளைச்சலின் துயரம் அதிகம் என்றால் நுண்ணுணர்வு சார்ந்த எளிதில் உணர்வுவயப்படக்கூடிய கொந்தளிப்பான மனநிலையை உடைய கலைஞர்களுக்கு இந்த உளைச்சல் சற்று அதிகமாகவே இருக்கும். ஆகவே ஐரோப்பிய சினிமாக்களை ஆராதிக்கிற அதன் நுணுக்கங்களை வியக்கிற கமல்ஹாசனால் மரத்தைச் சுற்றி டூயட் பாடும், தாயை, தங்கையை கட்டிப்பிடித்து மிகையாக கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும் மெலோடிராமா காட்சிகளில் உள்ளூற எப்படி உணர்ந்திருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது.

இவ்வகையான சமரசங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தமிழ் சினிமா எனும் பிரம்மாண்ட வணிக அடையாளத்தின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்று விலகத்தான் வேண்டியிருக்கும். அவ்வகையான கலைஞர்கள் வரலாற்றின் இருளில் மறைந்துதான் போயிருக்கிறார்கள். 'அவள் அப்படித்தான்' எனும் அற்புதமான திரைப்படத்தைக் கொடுத்த ருத்ரைய்யா அதன் பிறகு, (கிராமத்து அத்தியாயம் எனும் சுமாரான முயற்சியைத் தவிர) ஏன் எந்தவொரு திரைப்படத்தையுமே உருவாக்காமல் காணாமற் போய் விட்டார் என்று வியந்து கொண்டிருந்தேன். அவரைப் பற்றி எந்த தகவலுமே  அறியப்படாமலிருந்தது. ஆனால் அவரது மறைவின் போதுதான் அவரைப் பற்றிய நினைவுகள் சில திரையுலக நண்பர்களின் -கமல்ஹாசன் உட்பட -  மூலம் மீண்டெழுந்தன. அதன் மூலம் வரும் தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாய் இருக்கின்றன.  ருத்ரைய்யா தனது இறுதிக் காலம் வரையிலும் கூட தன்னுடைய  கனவு சினிமாக்களை உருவாக்குவது பற்றியும் அதை செயல்படுத்துவது பற்றியுமான உரையாடல்களை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கான சமசரங்களை, அவமதிப்புகளை அவரால் கடந்து வர முடியவில்லை என்பதால் எல்லாத் திட்டங்களுமே சாத்தியமாகாமல் போய் விட்டன. தமிழ் சினிமா எனும் பிரம்மாண்ட இயந்திரம் இவ்வாறு பலரை கடித்து துப்பி வெளியே அனுப்பியிருக்கிறது.

தாம் வியந்து பார்க்கும் அயல் சினிமா பற்றிய கனவுகள், அவற்றை இங்கு சாத்தியப்படுத்த  முடியாத யதார்த்தமான சூழல், அபத்தமான வணிகத் திரைப்படங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஆகிய தத்தளிப்பு சார்ந்த மனநிலையை, அதற்கான சமரசங்களை கமல்ஹாசன் வெற்றிகரமாக சமாளித்துக்  கொண்டு வருகிறார் என்றுதான் யூகிக்க முடிகிறது. அதனால்தான் அவரால் இத்தனை வருடங்கள் கழித்தும் தமிழ் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது. சமீப திரைப்படத்திலும் கூட நாயகியை மரத்திற்கு பின்னால் அழைத்து சென்று பிறகு உதட்டைத் துடைத்துக் கொண்டு வரும் தேய்வழக்கு காட்சிகளில் தொடர்ந்து இயங்க முடிகிறது. தமிழ்நாட்டிலேயே, பெண்ணுக்கு சரியாக முத்தம் தரக்கூடிய ஒரே ஆண் அடையாளமாக அவரை நிலைநிறுத்தி விட்டார்கள். முத்தம் என்பதற்கே விளம்பரத் தூதர் போல. கூடவே காதல் இளவரசன் என்கிற பிம்பமும்.  சமீபத்தில் நிகழ்ந்த உத்தம வில்லன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு பார்த்திபன் அந்த மேடையையே ஆபாசமாக்கினார்.


தன்னுடைய வணிக பிம்பத்தை நிலைநிறுத்திக்  கொள்வதின் மூலம் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டு அதன் மூலம் மெல்ல மெல்லதான் இங்கு ஏதாவது மாற்றம் செய்ய முடியும் என்கிற பிரக்ஞையும் அவருக்கு இருந்திருக்கிறது. தமிழில் சில மாற்று முயற்சிகள் உருவாவதற்கு கமல்ஹாசனின் நேரடி மற்றும் மறைமுகமான பங்களிப்பு இருந்திருப்பதற்கான உதாரணங்கள் இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட 'அவள் அப்படித்தான்' திரைப்படம் உருவாகி வெளிவருவதற்கு கமல்ஹாசனின் பங்கு மிக முக்கியமானதாய் இருந்திருக்கிறது. பாலுமகேந்திராவின் முள்ளும் மலரும் திரைப்பட உருவாக்கத்தில் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் முரண்  ஏற்பட்டு படமே நின்று போகும் சூழல் ஏற்பட்டிருக்கும் போது கமல்ஹாசன் அதில் தலையிட்டு சுமூகமான நிலையை உருவாக்கியிருக்கிறார். குடிசை, உச்சிவெயில் போன்ற மாற்று சினிமா முயற்சிகளை உருவாக்கிய ஜெயபாரதி அவரின் சமீபத்திய நூலில் எழுதியிருக்கும் சம்பவம் இது. ஜெயபாரதி துவக்க காலத்தில் தாம் உருவாக்க விரும்பும்  'இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்' திரைப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனை அணுகி மிக குறைந்த தொகையை முன்பணமாக அளித்திருக்கிறார். அருகிலிருந்த கமலின் சகோதரர், 'இச்செய்தி வெளியே தெரிய வந்தால் கமலின் சந்தை நிலவரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்' என்பது போல ஆட்சேபித்திருக்கிறார். அதற்கு கமல் சொன்ன பதில் "இந்தப் படத்திற்கு சம்பளமே வாங்காமல் நான் நடிப்பேன்". பிறகு அத்திரைப்படத்தில் பாடல்கள் எல்லாம் சேர்க்கிறார்கள் என்பதை அறிந்த கமல், 'அதான், ஏற்கெனவே நிறைய டான்ஸ் ஆடிட்டு இருக்கேனே. இதுலயுமா?" என்று நடிக்க மறுக்க அத்திரைப்படம் நின்று போனது. தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அல்லது துரதிர்ஷ்டமாக நிகழாமல் போன பல மாற்று முயற்சிகளுக்கு கமல்ஹாசன் ஆர்வமாக உதவ முன் நின்றிருக்கிறார் என்பதற்கான சில உதாரணங்கள் இவை.

இவைகளைத் தாண்டி தமிழில் சில மாறுதலான முயற்சிகளைத் தாமே உருவாக்க முனைந்தார். அதில் முதலாவதாக 1981-ல் வெளியான 'ராஜபார்வை'யைக் குறிப்பிடலாம். 80களில் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் தங்களின் சிறந்த படங்களைத் தந்து கொண்டிருந்த காலக்கட்டம். மலையாளத் திரையுலகின் சிறந்த காலக்கட்டத்தைப் போல தமிழ் சினிமாவின் முகமும் மாறி விடும் என்று திரை ஆர்வலர்கள்  நம்பிக்கை கொண்டிருந்த காலம். ஆனால் 'ராஜபார்வையின்' மாறுதலான திரைக்கதையையும் 'கண்பார்வையற்ற' குறைபாடுள்ள கதாநாயகனையும் தமிழக சினிமா பார்வையாளர்கள் கடுமையாக நிராகரித்தார்கள். படம் படு தோல்வியடைந்தது. கமல்ஹாசனுக்கு வணிக ரீதியான  பலத்த நஷ்டம். 'உங்களுக்கு இதுதானே வேண்டும்' என்கிற கடுப்பில் அடுத்த வருடமே வெளியான கமலின் படம்' சகல கலா வல்லவன்'. பட்டி தொட்டியெங்கும் தீப்பிடித்தாற் போல் ஓடி வசூலை வாரிக் குவித்தது. தமிழ் சினிமாவின் அந்தப் பொற்கால கனவை மூர்க்கமாக கலைத்துப் போட்டதில் 'சகல கலா வல்லவனுக்கு' முக்கியமான பங்குண்டு என்பது திரை வரலாற்றாய்வாளர்களின் தீர்மானமான கருத்து.  இப்படியாக நல்ல படைப்புகளுக்கு பார்வையாளர்கள் அதிர்ச்சி தந்தால்  படைப்பாளிக்ள அந்த தோல்வியின் கசப்பில் எதிர்திசையில் செல்லத் துவங்குவார்கள்.  பாரதிராஜாவின் 'வாலிபமே வா, வா', பாலு மகேந்திராவின்  'நீங்கள் கேட்டவை'  போன்றவை அந்தவகையில் சில உதாரணங்கள்.
 
ஒரு நிலையில் வழக்கமான வணிக சினிமா ஒருபுறம்,  ஹேராம் போன்று வணிக வெற்றி நிச்சயமல்லாத  மாற்று சினிமா முயற்சி ஒருபுறம் என்று  இரட்டைக் குதிரை சவாரி போல தம்முடைய திரைப்படங்களை கமல்ஹாசன் ஒழுங்குப் படுத்திக் கொண்டதை அவருடைய திரைப்படங்களின் வரிசைத்தன்மையை கவனித்தால் தெரியும். ஆனால் அவர் செய்யும் மாற்று முயற்சிகளில் உள்ள பிரச்சினைகளை ஒரு பட்டியலே போடலாம்.  அயல் சினிமாக்களால் தூண்டப்பட்டு அல்லது நகலெடுத்து அதில் தமிழ் சினிமாவின் வழக்கமான கூறுகளை கலந்து நீர்க்கச் செய்து இரண்டுங்கெட்டான் தன்மையாக்குவது, தன்முனைப்பு உணர்வுடன் தன் பிம்பத்தை பூதாகரமாக அவற்றில் திணித்துக் கொள்வது, அசல் படைப்பின் மையத்தை சிதைத்து கேலிக்கூத்தாக்குவது, தாம் நம்பும் கொள்கைகளை தம்முடைய பாத்திரங்களிலும் தொடர்பில்லாமல் எதிரொலித்துக் கொண்டேயிருப்பது, சிறந்த இயக்குநர்களிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளாமல் பொம்மலாட்ட இயக்குநர்களின் பெயர்களை உபயோகித்துக் கொள்வது என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


ஆனால் கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'உத்தம வில்லனில்'' இந்த வழக்கமான அம்சங்கள் உண்டுதானெினும் அவைகளிலிருந்து சற்று விலகி அவரது அசலான பிம்பத்தை ஏறத்தாழ அப்படியே நெருக்கமாக  பிரதிபலிப்பதாகவும் விசாரணை செய்வதாகவும் சுயபகடி செய்து கொள்வதாகவும்  திரைக்கதையை அமைத்திருப்பதை குறிப்பிடத்தக்க, கவனிக்கத்தக்க மாற்றமாக சொல்லலாம். ஒரு கதாநாயகனின் அசலான பிம்பங்களை புனைவில்  உபயோகித்து எது அசல், எது புனைவு என்கிற மயக்கத்தை ஏற்படுத்துவது, சுயவரலாற்றுத்தன்மையை அந்தப் படைப்பிற்கு அளிப்பது, ஒரு திரைப்படத்தில் உள்மடிப்பாக விரியும் இன்னொரு திரைப்படம்,  வெகுசன வழிபாட்டுக்குரிய ஒரு புராணத்தின் முடிவை கேலியாக மாற்றியமைப்பது என்று பின்நவீனத்தின் கூறுகளை இத்திரைப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஓர் உச்ச வணிக பிம்பமாகவும் ஸ்டார் நடிகனாகவும் இருக்கும் மனோரஞ்சன் எதிர்பாராத விதமாக மரணத்தின் அருகாமையை உணர்ந்தபின் தன் வாழ்வின் பெரும் பிசிறுகளை சரிசெய்ய முயல்கிறான். இது  ஒரு இழை. தாம் இறந்து போவதற்குள், தன் ரசிகர்கள் பல காலத்திற்கு நினைவில் வைத்திருப்பது போன்று சிரிக்க சிரிக்க ஒரு நல்ல நகைச்சுவைப்படம் எடுப்பதற்காக,  தன் வணிக பிம்பத்தை உதறி விட்டு,  திரைவாழ்வில் தன்னை துவக்கத்தில் உயர்த்திய குருநாத இயக்குநரின் மூலம் உருவாக்கும் நகைச்சுவைப்படம் இன்னொரு இழை.

ஒன்றோடு ஒன்று நெருங்கி தொடர்புடைய இந்த இரண்டு இழைகளும் மாற்றி மாற்றி அடுக்கப்பட்டிருப்பதன் வழியாக திரைக்கதை விரிகிறது. ஒருபுறம் சாவின் கருமையான நிழலின் நெருடிக்கடிகளை உணரும் மனோரஞ்சன், அவன் நடிக்கும் கடைசி திரைப்படத்தில் சாகாவரம் பெற்ற கோமாளியாக, தம் தடைகளை எளிதில் தாண்டி வருபவனாக சித்தரி்க்கப்படுகிறான். நடிகன் மனோரஞ்சனின் பகுதி மிக உணர்வுபூர்வமாகவும் நெகிழ்ச்சியானதாகவும் இருக்கிற காரணத்தினாலேயே அதன் சமன் செய்ய, பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமலிருக்க  இன்னொரு பகுதியை நகைச்சுவையும் நையாண்டியும் கொண்டதாக உருவாக்கியிருக்கலாம். இந்த நகைச்சுவைப் பகுதி மையக் கதைக்கு  நெருங்கிய தொடர்புள்ள அடையாளங்களுடன் இருந்தாலும் பலவீனமாக இருப்பதால் இதன் மூலம் முழுப்படத்திற்கும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. உண்மையிலேயே எட்டாம் நூற்றாண்டு நகைச்சுவைதான் உபயோகப்பட்டிருக்கிறதோ என நினைக்க வைக்கும் படி அதில்  பழமையின் நெடி வீசுகிறது.

ஆனால் நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல,  திரைப்படத்திற்குள் இயங்கும் இந்த இன்னொரு திரைப்படத்தை சிலர் முழுக்க வெறுப்பதாக சொல்லும் படி அத்தனை மோசமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  கேரளத்தின் மிகப் பழமையான வழிபாட்டு ஆட்டமான தெய்யத்தை  தமிழக பொதுப் பார்வையாளர்களுக்கு அடையாளம் காட்டியிருப்பது நல்ல விஷயம். அதனுடன் ஒலிக்கும் தமிழகத்தின் வில்லுப்பாட்டு இசையுடன் சேர்ந்து உருவாகியிருக்கும்  நடனக் காட்சிகள் அடர்த்தியான வண்ணங்களின் பின்னணியுடன் அபாரமாக பதிவாகியுள்ளன. ஜிப்ரானின் அற்புதமான இசையில் உருவான பாடல்கள் முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள அரசியல் நையாண்டிகளும் ரசிக்கும்படியே உள்ளன. அசந்தர்ப்பமாக ஒலிக்கும் வாழ்த்தொலிகள்,  சாகாவரம் பெற்றவனை சோதிக்க சிறுவர்கள் கல்லெறிய அந்தச்சூழலை உடனே பயன்படுத்திக் கொாண்டு கற்களை வணிகம் செய்பவர்கள், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகாரத்தின் அபத்தங்களுக்கு இழைந்த படி அமைச்சர்கள் செய்யும் கோணங்கித்தனங்கள், குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றிய மன்னர், பெண்ணின் மீதுள்ள மோகத்தினால் செய்யும் அசட்டுத்தனங்கள் என சமகால அரசியல், வணிக சூழலை நையாண்டி செய்யும் காட்சிகள் சிறப்பாகவே பதிவாகியுள்ளன. ஒவ்வொரு முறையும் மரணத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் காட்சிகளில் திரையரங்கில் உள்ள குழந்தைகள் கும்மாளமிட்டு சிரிக்கின்றனர். மையக் கதைக்கு தொடர்புள்ள பகுதிகள் மிக நுட்பமாக இதில் செருகப்பட்டிருப்பதை கவனிக்க முடியும்.

ஆனால் நடிகர் மனோரஞ்சனின் பகுதியை மட்டுமே முழுநீளத் திரைப்படமாக்கியிருந்தால் 'உத்தம வில்லன்" உண்மையிலேயே  ஒரு உத்தமமான படமாகியிருந்திருக்கும். சத்ஜித்ரே இயக்கத்தில் உத்தம்குமார் நடித்த 'நாயக்' எனும் அற்புதமான திரைப்படம் நினைவிற்கு வருகிறது.  புகழையும் பணத்தையும் துரத்திச் செல்லும் ஒரு நடிகனின் அகரீதியான தனிமையையும் துயரத்தையும் தனது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அதை இழந்து விடுவோமோ என்று அவன் படுகிற உளைச்சலையும் ரே அபாரமாகப் பதிவு செய்திருப்பார். மனோரஞ்சன் இயங்கும் பகுதியில் நிறைய  அற்புதமான கணங்கள்  உள்ளன. இந்தப் பகுதிகள் பார்வையாளர்களிடம் ஏற்படும் மனவெழுச்சிகளை இன்னொரு பகுதி தனது சாதாரணமான நகைச்சுவையால் சிதைத்து விடுகிறது என்பது உண்மையே. திரைக்கதையின் இந்தக் கலவை சரியாக உருவாகி வராமல் துண்டு துண்டாக நிற்கிறது.

வெகுசன இதழ் தொடர்கதைகளின் சாத்திய எல்லைகளுக்கு  உட்பட்டு சுஜாதா எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்றான  கனவுத் தொழிற்சாலையையும் இங்கு நினைவுகூரலாம். உத்தம வில்லனிலும் அதற்கான லேசான சாயல் உள்ளது. கனவுத் தொழிற்சாலை நாவலின் கதாநாயகனான நடிகன் அருண் தன்னுடைய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியின் மிதப்பில் இருப்பான். அதே சமயத்தில் அடுத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கான பாதுகாப்பற்ற உணர்வும் இருக்கும். நிறைய புகழ், பணமிருந்தும் அவனுடைய வாழ்வு முழுமை பெறாத உணர்விருக்கும்.தன்னைச் சுற்றி எத்தனையோ அழகான நாயகிகள் இருந்தாலும்  தன்னுடைய இளம் வயது தோழியே தன்னுடைய ஆழ்மனதில் முழுக்க நிரம்பியிருப்பதை உணர்வான். அவளைத் திருமணம் செய்ய உத்தேசிப்பான். ஆனால் அவனுடைய நடிக அடையாளமே அவனுடைய திருமணத்திற்கு தடையாக இருக்கும். அந்த ஏமாற்றத்தின் கசப்பில் ஒரு நடிகையை மணந்து கொள்வான். சில பல ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சந்தி்ப்பான். பிறகு அவனுடைய நம்பகமான உதவியாளன் மூலம் தன் சறுக்கல்களிலிருந்து மீண்டு வருவான். சினிமா உலகின் உட்கூறுகளை துல்லியமாக விவரிக்கும் சில கிளைக்கதைகளும் உண்டு. என்றாவது ஒரு நாள் சிறந்த நடிகையாகி விட முடியும் என்கிற கனவிலும் நம்பிக்கையிலும் இருக்கும் துணை நடிகை, சினிமா தன்னை சக்கையாக மென்று துப்பி விடும் துரோகத்தில் தற்கொலை செய்து கொள்வாள். கடுமையான வறுமையில் சினிமா வாய்ப்பிற்காக ஓர் எளிய கவிஞன் சில பல இழப்பிற்கும் அலைக்கழிப்பிற்கும் பிறகு வெற்றிகரமான கவிஞனாகி புகழின் வெளிச்சத்தில் நிற்கும் வாய்ப்பை பெற்று விடுவான். ஆனால் அவனது சுயவாழ்க்கையின் ஆதாரமான அன்பை இழந்து விடுவான். தன்னுடைய கனவு சினிமாவை அதற்கான நம்பிக்கையுடன் மெல்ல உருவாக்கும் ஓர் இளைய இயக்குநனும் இருப்பான்.

சுஜாதாவின் நாவலில் உருவாகியிருக்கும் நடிகன் அருணில் கமல்ஹாசனின் சாயல் நிறைய இருக்கும். ஐரோப்பிய இயக்குநர்களின் மேற்கோள்களை நினைவு கூரும், அவர்களின் திரைக்கதையை வாசிக்கும், நிறைய திரைப்படங்களை பார்க்க விரும்பும், குறும்படம் உருவாக்க விரும்பும் அருணின் கனவுகள் போகிற போக்கில் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவனின் கனவுகளை வணிக வெற்றி என்னும் மலைப்பாம்பு தொடர்ந்து விழுங்கிய படியே பின்னால் வந்து கொண்டிருக்கும். கமல்ஹாசன் இந்த நாவலையே கூட சில பல மாற்றங்களுடன் திரைப்படமாக உருவாக்கியிருந்தால் அதுவொரு அற்புதமான படைப்பாக உருமாறியிருக்கும் எனத் தோன்றுகிறது.


கமலின் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் உத்தம வில்லனில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மனோரஞ்சனின் பகுதி அவருடைய அசலான பிம்பத்திற்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் மிக முக்கியமான, பாராட்டக்கூடிய அம்சம். புனைவிற்கும் நிஜத்திற்குமான இடைவெளிகள் அதற்கான தடயங்களுடன் வெற்றிகரமாக இத்திரைப்படத்தில் தாண்டப்பட்டிருப்பதால் அது சார்ந்த யூகங்களை உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது. இத்திரைப்படத்தில் மனோரஞ்சன் சில பல தடைகளால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன 'யாமினி' உண்மையில் எவர் என்று யூகிப்பது அத்தனை கடினமானதொன்றில்லை. கேன்சர் நோயினால் அந்த நடிகை இறந்து போன அந்த சம்பவத்தைப் போலவே அதே நோயினால் இந்தப் புனைவின் மனோரஞ்சனும் இறந்து போகிறான் என்பது தற்செயலான ஒற்றுமையா அல்லது திட்டமிடப்பட்டதா எனத் தெரியவில்லை.

ஒரு மிகச் சிறந்த நடிகனாக கமல்ஹாசன் தன்னை நிருபித்துக் கொள்ளும் அபாரமான தருணங்கள் மனோரஞ்சன் வரும் பகுதியில் உள்ளன. பல வருடங்களுக்குப் பிறகு தன் மகளைக் காண நேரும் காட்சியில் அது குறித்த மனவெழுச்சி, அவளின் வெறுப்பை ஜீரணிக்க முயன்று மயங்கி விழும் காட்சி, தன் சாவை மகனிடம் சொல்லும் காட்சி, அதன் மூலம் இருவருக்கும் இடையில் இருந்த அதுவரைக்குமான பனித்திரை உடைவது, தன் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட, உதவியாளர் மறைத்த கடிதத்தை அவரையே வாசிக்கச் சொல்லும் தண்டனை கலந்த பிராயச்சித்தத்தை வழங்குவது, தன் பக்க கதையில் தானே உத்தமனாக இருப்பதை மகளிடம் நிரூபிக்கும் விருப்பத்தில் அதன் சாட்சியமான கடிதத்தை மகளையே வாசிக்கச் சொல்வது, கடிதத்தின் இறுதியில் ஒப்பனை கலைக்கப்பட்ட  மனோரஞ்சனின் முகம் புன்னகையுடன் உறைவது என..பல காட்சிகளில் கமல்ஹாசன் எனும் அற்புதமான நடிகனின் கலைநேர்த்தியுடன் கூடிய அனுபவங்கள் பதிவாகியுள்ளன.. இதில் வரும் ஒவ்வொரு துணை பாத்திரமும் அதற்கான தனித்தன்மையுடன் பதிவாகியிருப்பதும் சிறப்பே. நடிகனுக்கு நம்பகமான விசுவாசி சொக்குவாக சிறப்பாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பணக்கார அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய விளையாட்டுப் பொம்மை போல நடிகனை திருமணம் செய்து கொண்ட பிடிவாதக் குழந்தையாக ஊர்வசி, சாதாரணமான ஒருவனை வணிக உலகில் உச்ச நடிகனாக உயா்த்திய பெருமிதத்துடன் உலவும் விஸ்வநாத் என்று துண்டு துண்டான பல்வேறு குணச்சித்திரங்கள். துணை நடிகருக்கான இவ்வருட தேசிய விருதுப் பட்டியலில் ஆண்ட்ரியாவின் பெயர் நிச்சயம் இடம் பெறும், பெறவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அத்தனை சிறப்பான நடிப்பை அவர் இத்திரைப்படத்தில் வழங்கியிருக்கிறார். யாமினியிடம் இழந்து போன காதலை, மருத்துவர் அர்ப்பணாவிடம் மீட்டுக் கொள்ள மனோரஞ்சன் முயலும் போது அதைப் பொதுவில் சொல்ல முடியாத தவிப்பும் ரகசியமாக வைத்துக் கொள்ள முயலும் தியாகமுமான உணர்வை பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கமல்ஹாசன் உருவாக்கும் திரைப்படங்களின் சில சிறப்புகளுக்கான பாராட்டை அவருக்கே வழங்குவதா அல்லது இயக்குநர் என்று அவர் சுட்டிக்காட்டும் அடையாளத்திற்கு வழங்குவதா என்று குழப்பம் வழக்கமாக ஏற்படும். அன்பே சிவம் திரைப்படத்தை சுந்தர்.சி. இயக்கினார் என நாம் நம்ப விரும்பினாலும் அவர் இயக்கிய மற்ற அபத்தமான திரைப்படங்களில் அன்பே சிவத்தின் சிறு தடயத்தைக் கூட காண முடியாது என்பதே காரணம். இதிலும் அவ்வாறே. ரமேஷ் அரவிந்தின் பங்கு என்னவென்று தெரியவில்லையென்றாலும் மனோரஞ்சன் இயங்கும் பகுதியில் பல இடங்களில் அற்புதமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் திரைமொழியின் உன்னதங்களை வரிசையாக பாராட்டலாம். உதாரணத்திற்கு சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால் மனோரஞ்சன் தன் மகளை முதன்முறையாக சந்திக்கும் காட்சியில் படப்பிடிப்பிற்கென உருவாக்கப்பட்டிருக்கும் புராதனமான பின்புலம் முதலிலும் சமகாலத்தின் பின்புலம் மாறி வரும். மனோரஞ்சன் ஒரு விநாடிக்குள் காலஇயந்திரத்திற்குள் பயணிக்கும் மனவெழுச்சியை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த திரைமொழி உத்தி பாராட்டத்தக்கது. போலவே தன் உதவியாளர் மறைத்த யாமினியின் கடிதம் வாசிக்கப்படும் போது திரையில் வில்லன் என்ற எழுத்திற்கு நிகராக கமலின் உருவம் வந்து நிற்கும். அந்தக் கடிதத்தின் நோக்கில் அவரே வில்லன் என்கிற மயக்கத்தை அந்தக் காட்சியின் அனுபவம் தரும்.

கமல்ஹாசனின் இவ்வாறான மாற்று  முயற்சிகளை சிலாகிக்கும் போது அவற்றை தமிழ் சினிமாவின் அல்லது இந்தியச் சினிமாவின் எல்லைக்குள் நின்றுதான் பாராட்ட வேண்டியிருப்பது ஒரு துரதிர்ஷ்டம். ஒரு பிரதியில் தன்னை பூதாகரமாக இட்டு நிரப்பிக் கொள்ளும் அல்லது அவ்வாறான பிரதிகளைத் தேடும் கமல்ஹாசனின் தன்முனைப்பு மோகம் அவர் முன் மிகப் பெரிய தடையாக இருக்கிறது. மனோரஞ்சனின் பாத்திர உருவாக்கத்தின் மூலம் அதிலிருந்து சற்றே சற்று விலகிய வகையில் உத்தம வில்லன் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிறந்த கதையின் பாத்திர எல்லையை மீறவே மீறாத வகையில் சிறந்த இயக்குநரின் கையில் தம்மை கமல் ஒப்புக் கொடுப்பாராயின் அவரிடமிருந்து சர்வதேச தரத்தில் ஒரு திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை உத்தம வில்லன் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இதுவொரு நல்ல முயற்சியே.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த சுஜாதாவின் குறிப்பு இவ்வாறாக முடிகிறது. 'உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.'

1976-ல் எழுதப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையை 2015-ம் ஆண்டு வரைக்கும் கூட நம்பிக்கையாகவே நீடிக்கச் செய்து கொண்டேயிருக்கும் கமல்ஹாசனின் மீது ஏமாற்றம் கொள்வதா, அல்லது அபத்தமான ரசனையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கொண்டு  தமிழ் சினிமாவுலகில் சற்றேனும் விலகி தொடர்ந்து அந்த நம்பிக்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறாரே என ஆறுதல் கொள்வதா அல்லது என்றாவது ஒரு நாள் அந்த நம்பிக்கையை மெய்ப்பித்து விடுவார் என்று மகிழ்ச்சி கொள்வதா என்று தெரியவில்லை. எப்படியாக இருந்தாலும் நம்பிக்கையளிக்கும்  'மனோரஞ்சனுக்கு' வாழ்த்தும் பாராட்டும்.

 
suresh kannan

No comments: