Friday, February 20, 2015

கருப்பு வெள்ளை காவியங்கள் (தி இந்து பொங்கல் மலர் கட்டுரை)

    'மதிப்பிற்குரிய ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, பிரணாம்.

    சமீபத்தில் நான் சென்னை வந்திருந்த சமயம் தங்கள் 'ஒளவையார்' படத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையில் அது எனக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். சங்கீதத்தின் பால் உங்களுக்குள்ள பிரேமைக்கும், கடவுளிடம் பக்திக்கும் 'ஒளவையார்' ஒரு பூர்ணமான அத்தாட்சி. முக்கியமாக ஸ்ரீமதி சுந்தராம்பாளின் அரிய செயல்களைக் கண்டு வரும் போதே என் கண்களில் பலமுறை நீர் நிரம்பி விட்டது.

    அவர் ஏற்று நடித்த பாகத்தையும் பார்த்து, அவருடைய சங்கீதத்தையும் கேட்டபிறகு வெட்ட வெளிச்சமாக எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது. உண்மைக் கலைஞர்களின் கீதத்திலேயுள்ள இனிமையும் சுவையும் அவர்களுடைய இதயத்தின் மேன்மையிலும் நாதோபாஸனையிலும் கலையிலும் கொண்டுள்ள பக்தியிலும் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

    நானே விநாகராயிருந்தால் இம்மாதிரி உணர்ச்சியுடன் பாடும் ஒரு தொண்டரை - தொண்டராயிருக்கும் தொண்டன் என்ற முறையில் அவரைத் தொழுது கொண்டே இருப்பேன். இதற்கு மேல் அவர் மீது எனக்குள்ள மதிப்பை வெளியிட வார்த்தைகள் அகப்படவில்லை.

    பொது ஜனங்களுக்கு இணையற்ற படம் ஒன்றை அளித்ததற்கு உங்களை நான் பாராட்டுகிறேன். படங்களில் கர்நாடக சங்கீதம் சோபிக்காது என்று சொல்கிறவர்களுக்கு 'ஒளவையார்' படம் ஆணித்தரமாக பதில் கொடுக்கும்.'


ஒளவையார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் வாசனுக்கு மேற்கண்ட கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா? இந்தித் திரையுலகில் நீண்ட வருடங்களாக கானக் குயிலாய் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர். ஒரு தமிழ் திரைப்படத்தின் தரத்தையும் சிறப்பையும் குறி்த்து வட இந்தியாவிலிருந்து ஒலித்த இந்தக் குரலின் மூலம் உண்மையாகவே நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். இளைய தலைமுறைவாசிகளில் எத்தனை சதவீதம் பேருக்கு துவக்க கால தமிழ் திரைப்படங்களைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் முன்னோடி இயக்குநர்களையும் பற்றியும் தெரியும்?

()


எட்டு வயது மகளிடமிருந்து சிறிய போராட்டத்திற்குப் பிறகு ரிமோட்டை கைப்பற்றி  தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு சானலில் இருந்து ஜி.ராமநாதனின் அற்புதமான திரையிசைப்பாடல் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். மனம் அதிலே நிலைத்து சற்று மெய் மறந்து கொண்டிருந்தேன்.திடீரென்று சானல்கள் சட்சட்டென்று மாற்றப்பட்டு கொசகொசவென்று ஒலிகள் எழுப்பும் ஒரு கார்ட்டூன் சானலில் வந்து நின்றது. 'கிருஷ்ணா முகுந்தா' விற்கு என்னவாயிற்று என்று சற்று திடுக்கிடலுடன் கண் திறந்து பார்த்தேன். ரிமோட் மறுபடியும் களவாடப்பட்டிருந்தது. ஏதும் அறியாதவள் போல் தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தவளிடம் "ஏன் அந்தப் பாட்டு நல்லாத்தானே இருந்தது. ஏன் மாத்திட்டே?" என்றேன். "போப்பா.. போரு.." என்றாள் சிக்கனமாய். இன்னும் சில விநாடிகளிலேயே பொறுமையிழந்து சானல் மாறி 'செல்பி புள்ள'யில் வந்து நிற்கும் என தெரியும். கறுப்பு - வெள்ளை சித்திரங்களையோ, நின்று நிதானமாய் நகரும் சட்டகங்களையோ அவள் பார்க்கத் தயாராகவேயில்லை.

இதுதான் இன்றைய இளைய தலைமுறையின் உத்தேசமானதொரு சராசரி  பிம்பம். எதிலும் நிலைகொள்ளாத பொறுமையற்றதின் அடையாளம். துரித  உணவு வகைகளைப் போலவே அவர்களின் கலை சார்ந்த ஈடுபாடும் துரித வகை பாணிகளை மாத்திரமே விரும்புகிறது. அவசர அவசரமாக விழுங்குகிறது. என்னவென்றே புரியாத வேகமாக ஓடும் பாடல் வரிகள், கண்களுக்கும் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்துகிற சட்சட்டென்று உடனுக்குடன் மாறும் பிரேம்கள், 'நிறுத்தித் தொலையேன்' என்று எரிச்சல் படவைக்கும் அதிரடி இசை. ஒவ்வொரு தலைமுறை இடைவெளிகளுக்குள்ளும் ஏற்படும் வழக்கமான புகார்கள்தான் இது. ஆனால் முந்தைய காலத்தை முன்தீர்மானமான வெறுப்புடனும் விலகலுடனும் அணுகும் அந்த மனப்பான்மைதான் நெருடுகிறது.

இன்று நுட்பத்தில் உயர்ந்திருந்தாலும் திரைமொழியிலும் உள்ளடக்கத்திலும் ஏறத்தாழ அதே மாதிரியாக இருக்கும் தமிழ் சினிமாவின் தோற்றத்தின், வளர்ச்சிக்கும் பின்னால் எத்தனையோ முன்னோடிகளின் உழைப்பும் ஆர்வமும் தியாகமும் உள்ளது. சமகாலத்தை விடவும் மிக அற்புதமான சுவாரசியத்துடன் கூடிய தமிழ் சினிமாக்கள் கடந்த காலங்களில் உருவாகியுள்ளன். மிகச் சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகைய மைல்கல் சினிமாக்களைப் பற்றியும் அவற்றின் தொடர்பான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


சினிமா உருவாக்கத்தின் பல்வேறு காலகட்ட வளர்ச்சி நிலைகளுக்குப் பின் 1895 -ல் லூமியர் சகோதரர்கள் பிரான்சில் வெற்றிகரமான சலனப்படத்தை முயற்சித்த இரண்டாண்டுகளிலேயே அதனைக் காண்பதற்கான வாய்ப்பு அப்போதைய மதராச பட்டிணத்திற்கு கிடைத்து விட்டது. 1897-ல், ரிப்பன் கட்டிடத்திற்கு அருகேயுள்ள விக்டோரியா ஹாலில் 'Arrival of the Train' மற்றும் 'Leaving the Factory' ஆகிய துண்டுப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உருவான ஒலியல்லாத குறும் படங்களே பெரும்பாலும் இங்கு திரையிடப்பட்டன. ஏறத்தாழ இந்தியா முழுமையிலும் திரையிடப்பட்ட 'Life of Jesus Christ' என்கிற மெளனப்படத்தை டுபான்ட் என்கிற பிரெஞ்சுக்காரரிடமிருந்து ரூ.2000/- கொடுத்த வாங்கிய சாமிக்கண்ணு வின்சென்ட், இதன் மீதுள்ள ஆர்வத்தால் தன்னுடைய ரயில்வே பணியை விட்டு விட்டு தமிழகத்தின் மற்ற ஊர்களுக்குச் சென்று இத்திரைப்படத்தை காட்டி எளிய மனிதர்ளுக்கும் சினிமாவை கொண்டு சேர்த்தார்.. இதன் மூலம் ஈட்டிய தொகையில் கோவையில் 'வெரைட்டி ஹால்' என்கிற நிரந்தரமான இடத்தை அமைத்தார். தென்னிந்தியாவின் முதல் நிரந்தரமான சினிமா கொட்டகை இதுவே.

மெளன்ட் ரோட்டில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருந்த வெங்கையா என்பவர் சினிமாவின் துவக்க முயற்சிகளின் மீதுள்ள ஈடுபாட்டால் கிராமபோனுடன் இணைந்த திரைப்படக் கருவியை வாங்கி படங்களை திரையிட்டார். ஒளி ஒருபுறமும் ஒலி இன்னொரு புறமும் வெளிப்பட்டாலும் அவை கச்சிதமாக இணைந்து செயல்படும் போது முழுமையான திரைப்படம் பார்க்கின்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இவர் முதன் முதலாக கட்டிய திரையரங்கு 'கெயிட்டி'. இந்தச் சமயத்தில் இந்தியாவிலேயே தயாரான முதல் மெளனப்படம் பம்பாயில் வெளியாகியது. 1913-ம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி வெளியான 'ராஜா ஹரிச்சந்திரா' என்னும் அந்த மெளனப் படத்தை உருவாக்கியவர், 'இந்திய திரைத்துறையின் தந்தை' என்று போற்றப்படும் தாதாசாகிப் பால்கே.

வேலூரைச் சேர்ந்த ஆர்.நடராஜ முதலியார், பால்கேவின் இந்த முயற்சிகளைப் பார்த்து திரைப்படங்களை உருவாக்கும் நுட்பங்களின் மீது ஆர்வம் கொண்டார். மோட்டார் வாகன வியாபாரம் செய்து கொண்டிருந்த அவர், ஸ்டூவர்ட் ஸ்மித் என்கிற ஆங்கிலேயரிடம் திரைப்பட உருவாக்கத்தை கற்றுக் கொண்டார். 'இந்தியா பிலிம் கம்பெனி' எனும் திரைப்பட நிறுவனத்தை ஏற்படுத்தினார். சென்னையில் முதன் முதலில் திரைப்பட ஸ்டூடியோவை உருவாக்கியவர் இவரே. புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் இந்த ஸ்டூடியோ உருவானது. நடராஜ முதலியார், மகாபாரதத்தில் உள்ள ஒரு கதையை தேர்வு செய்து தயாரித்த 'கீசக வதம்' என்னும் திரைப்படமே, தென்னிந்தியாவின் முதல் மெளனப்படம். 1917-ல் இது வெளியானது. எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என அனைத்துப் பணிகளியும் நடராஜ முதலியாரே மேற்கொண்டார்.

ஒலியல்லாத திரைப்படம் என்பதால் வசனங்கள் அட்டையில் எழுதப்பட்டு காட்சிகளின் இடையில் காட்டப்படும். தமிழ், ஆங்கிலம். இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட இந்த வசனங்களில் இந்தி வடிவத்தை எழுதியவர் மகாத்மா காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி. தமிழ் வசனத்தை எழுதியவர் நாடகத்தந்தை என போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார். இந்தப் படத்தின் வெற்றியினால் உற்சாகமடைந்த நடராஜ முதலியார் தொடர்ந்து 'திரெளபதி வஸ்திராயணம்' என்பது உள்ளிட்ட புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆறு திரைப்படங்களை உருவாக்கினார். பாகஸ்தர்களுடனான கருத்து வேறுபாடு, ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து, விபத்தில் நிகழ்ந்த மகனின் மரணம் ஆகிய காரணங்கள் அவரைத் திரைத்துறையிலிருந்து விலகச் செய்து விட்டன. என்றாலும் இன்னொரு முக்கிய காரணத்தை தன்னுடைய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் நடராஜ முதலியார். இயக்குநர் ஸ்ரீதர், தான் நடத்தி வந்த பிலிமாலாயா இதழிற்காக நடராஜ முதலியாரை தேடிக் கண்டுபிடித்து உரையாடினார்.

காந்தி அந்நியத் துணிகளை புறக்கணிப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அது பற்றிய சினிமா ஒன்றை உருவாக்க விரும்பியிருக்கிறார் நடராஜ முதலியார். இந்த முயற்சியைப் பலர் பாராட்டினாலும் நிதியுதவி செய்ய எவரும் முன்வரவில்லை. சினிமாவை மக்களுக்கான கலை சாதனமாக பயன்படுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் திரைத்துறையில் இருந்து விலகி விட்டதாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தமி்ழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான நடராஜ முதலியார் 1972-ல் காலமானார்.

***


முதல் மெளனப்படம் வெளியாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு 1931-ல் உருவானது, தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் காளிதாஸ். ஆனால் இதுதான் முதல் பேசும் படமா என்பதில் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏனெனில் இதில் வரும் பாடல்கள் தமிழில் இருந்தாலும் வசனங்கள் தமிழைத் தவிர தெலுங்கு, இந்தியிலும் இருந்தன. இந்தப் படத்திற்காக விமர்சனம் எழுதிய கல்கி இந்தக் குறையை தனது பிரத்யேகமான பாணியில் கிண்டலடித்தார். ( 'டாக்கி' என்பது ஆங்கில வார்த்தை. 'டாக்' என்றால் பேச்சு. பேசும் சினிமா படக் காட்சிகளுக்கு 'டாக்கி' என்று சொல்கிறார்கள். 'தமிழ் டாக்கி' என்று கலப்பு மொழி பேசுவதற்கு என்னுடைய தமிழ் அபிமானம் இடங்கொடுக்கவில்லை. எனவே, 'தமிழ்ப் பேச்சி' என்று பெயர் கொடுக்கலாமென்று முதலில் தீர்மானித்தேன். ஆனால், நான் பார்த்த 'பேச்சி' உண்மையில் 'பாட்டி'யாயிருந்தது. அதாவது, தமிழ்ப் பேச்சு அதில் கிடையாது. விசாரித்ததில், அது தெலுங்கு பாஷை என்று அறிந்தேன். முதலிலும் நடுவிலும் கடைசியிலும் சில தமிழ்ப் பாட்டுக்கள் பாடப் பெற்றன. ஆகையால் நான் பார்த்து, கேட்டு, அனுபவித்த காலட்சேபத்திற்கு, 'தமிழ்ப் பாட்டி' என்று பெயர் கொடுப்பதே பொருத்தமென்று தீர்மானித்தேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் 'தெலுங்குப் பேத்தி' என்று வைத்துக்கொள்ளுங்கள்.'). மகாகவி காளிதாசனைப் பற்றிய திரைப்படம் இது.

அப்போதைய பிரபல நாடக நடிகை டி.பி.ராஜலட்சுமி இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநரும் இவரே. கினிமா ஸெண்ட்ரல் என்று முன்னர் அழைக்கப்பட்ட முருகன் டாக்கீஸில் இத்திரைப்படம் வெளியானது. அப்போது இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்ததால் நாடகம் மற்றும் சினிமாக்களின் இடையில் காட்சிகளுக்கு தொடர்பில்லாமல் தேசபக்திப் பாடல்கள் பாடுவது இயல்பானதொன்றாக இருந்தது. பிரிட்டிஷ் அரசின் சென்சாரிலிருந்து தப்பிக்கவும் இந்த உத்தி பயன்பட்டது. 'ரத்தினமாம் காந்தி கை பானமாம்', 'இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை' போன்ற தேசபக்திப் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. மதுரகவி பாஸ்கர தாஸ் இப்பாடல்களை எழுதியிருந்தார். (அம்மாள் பாடிக்கொண்டே இராட்டை சுற்றுவது போல் வெறுங் கையைச் சுற்றிக்காட்டியபோது, சபையோரின் சந்தோஷ ஆரவாரத்தைச் சொல்லமுடியாது. 'இராட்டை சுற்றுவது இவ்வளவு சுலபமா?' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். - கல்கி).

தமிழ் சினிமாவில் எப்போதுமே இரு பெரும் நடிகர்களின் பெரும்பான்மை இருப்பது தியாகராஜ பாகவதர் x பி.யூ. சின்னப்பா வரிசையில் இருந்துதான் துவங்கியது. சந்தேகமேயில்லாமல் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர்தான். இவரின் இசைத் திறமைக்காகவும் அற்புதமான குரலினிமைக்காகவும் பல ரசிகர்கள் இருந்தாலும் இவரது தோற்றப் பொலிவு காரணமாக அந்தக் காலத்திலேயே  பல வெளிப்படையான பெண் ரசிகைகளும் இருந்தார்கள். சிறுவயதிலியே கர்நாடக இசையில் திறமை பெற்றிருந்த எம்.கே.டி, பவளக்கொடி என்கிற நாடகத்தில் அர்ஜுனனாக நடித்து புகழ்பெற்றிருந்தார். தமிழ் திரையின் தந்தை என போற்றப்படும் கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் 1934-ல் இது திரைப்படமாக வெளிவந்த போது அபாரமான வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் இருந்த ஐம்பத்தைந்து பாடல்களில் (ஆம் 55) 22 பாடல்களை பாகவதரே பாடியிருந்தார். பாகவதரின் புகழ்  தமிழகமெங்கும் தீ வேகத்தில் பரவியது. அவரைத் தொட்டுப் பார்க்கவும் கையில் முத்தமிடவும் ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தார்கள். அவரை நேரில் பார்த்த சில பெண் ரசிகைகள் மூர்ச்சையடைந்து விழுந்ததாக கூட தகவல்கள் உண்டு. பாடல்களுக்காகவே அவரது திரைப்படங்கள் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டன. அதன் பிறகு வெளிவந்த நவீன சாரங்கதாரா, சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றியை சந்தித்தன.

இந்த வெற்றி வரிசையின் மிக உச்சம் என ஹரிதாஸ் திரைப்படத்தைச் சொல்லலாம். 1944-ல் வெளியானது. அப்போது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்ததால் திரைப்பட கச்சாப் பொருட்களுக்கு பிரிட்டிஷ் அரசு கெடுபிடிகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. எனவே இத்திரைப்படம் அக்காலத்திய வழக்கப்படி நிறைய பாடல்களுடன் மிக நீளமான அளவிற்கு அல்லாமல் 11000 அடி கொண்டதாக  மாத்திரமே உருவானது. இத்திரைப்படத்தை பற்றி எந்தவொரு கட்டுரையிலும் சலிக்க சலிக்க தவறாது குறிப்பிடப்படும் ஒரு தகவல் உள்ளது. அதாவது இத்திரைப்படம் சென்னை, பிராட்வே டாக்கீஸில் (இத்திரையரங்கு இன்னமும் செயல்பாட்டில் உள்ளது) தீபாவளி தினத்தன்று வெளியாகி மூன்று தீபாவளிகளைக் கடந்து அதாவது சுமார் 110 வாரங்கள் இடைவிடாது தொடர்ந்து ஓடியது. தமிழ் சினிமாவில் இது இன்னமும் முறியடிக்கப்படாததொரு சாதனையாக விளங்குகிறது. 'வாழ்விலோர் திருநாள்' என்று பாகவதர் குதிரையில் வரும் அறிமுகக்காட்சி இன்றைய எந்தவொரு நாயகர்களின் 'ஹீரோ எண்ட்ரி' காட்சிகளுக்கு குறைவில்லாததாக இருக்கிறது. ஹரிதாஸ் எனும் கவித்துறவியைப் பற்றிய கதையிது. ஸ்தீரி லோலனாக விளங்கும் ஹரிதாஸ், தனது தாய் தந்தையரை மதிக்காமல் பெண் பித்து கொண்டு ஊதாரியாக சுற்றுகிறான். மனைவியை ஏமாற்றுகிறான். ரம்பா எனும் தாசியிடம் மயங்கி தன்னுடைய சொத்துக்களை இழக்கிறான். பின்பு கடவுள் நிந்தனையால் தன் கால்களை இழந்து மனம் திருந்தி இறை வழிபாட்டில் ஈடுபடுகிறான். தாய், தந்தையருக்கு பக்தியுடன் பணிவிடை செய்கிறான்.

இந்த நீதியை தமிழ் சமூகம் அறிந்து கொள்ளத்தான் இத்திரைப்படம் மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்ததா என்ற கேள்வி எழலாம். இருக்க முடியாது. தென்னிந்திய சினிமாவின் முதல் கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி இதில் ஹரிதாஸை மயக்கி ஏமாற்றும் தாசி வேடத்தில் நடித்திருந்தார். இவர் பாகவதருக்கு 'பிளையிங் கிஸ்' தரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் நிச்சயம் கிறுகிறுத்துப் போயிப்பார்கள். அந்தக்காலத்தில் இதுவே உச்சபட்சமான கவர்ச்சி. துவக்க காட்சியில் பாகவதரைப் பார்த்து ஒரு பெண் மயங்கி கண் சிமிட்டும் காட்சியும் உள்ளது. இன்றைக்கு பொது வழக்கில் ஆட்சேபகரமாக கருதப்படும் 'தேவடியாள்' போன்ற வார்த்தைகள் இதில் இயல்பாக, சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்டன. இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் முதல் ஸ்டார் அந்தஸ்து பெற்ற வசனகர்த்தா இளங்கோவன் வசனம் எழுதியிருந்தார். அதுவரை தமிழ் சினிமாவில் சமஸ்கிருத வாடையோடு புழக்கத்தில் இருந்த மணிப்பிரவாள நடையை மாற்றி பெரும்பாலும் தமிழ் வசனங்கள் இடம்பெறச் செய்த பெருமை இளங்கோவனையே சாரும். வசனங்களில் சுவாரசியத்தையும் நாத்திக வாசனையுடன் கூடிய இடக்குகளையும் திறமையாக உபயோகித்திருந்தவர் இவர். பூஜையறையில் ராமாயணம் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர், மாமியார் -மருமகள் சண்டையைக் கேட்டு விட்டு சொல்வார் "இங்கே ராமாயணம், அங்கே மகாபாரதம்". இன்னொரு காட்சியில் மனம் திருந்திய ஹரிதாஸ் தன் மனைவியிடம் தன் தாய் தந்தையரின் பாதங்களைக் கழுவினால் புண்ணியம் கிட்டும்' என்பார். உடனே அவரது மனைவி "உங்கள் தாய்-தந்தையரை ஏதாவது நதியில் தள்ளி விட்டு விடுங்களேன், இந்த ஊரே புண்ணியம் அடையட்டும்" என்பார் இடக்காக.
.
ஜி.ராமநாதன் இசை மற்றும் பாபநாசம் சிவன் பாடல்கள் இணைந்த கூட்டணி இத்திரைப்படத்திலும் அற்புதமாக அமைந்திருந்தது. 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' என்கிற திரையிசைப்பாடல் இன்றளவும் மிகுந்த புகழோடு விளங்கி சாகாவரம் பெற்று விட்டது. 'கிருஷ்ணா முகுந்தா முராரே' என்பது இன்னொரு மெகாஹிட் பாடல். பாகவதரிடம் எந்த தயாரிப்பாளராவது கால்ஷீட் கேட்டு சென்றால் "முதலில் இளங்கோவனையும் பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்து விட்டு இங்கு வந்து பேசுங்கள்' என்று உத்தரவு போடுமளவிற்கு இந்தக் கூட்டணியின் பங்களிப்பு பாகவதரின் திரைப்படங்களின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் கூட்டணியும் சிறப்பாய் அமைந்திருந்தது. பிரபல கர்நாடக இசைப்பாடகி என்.சி.வசந்த கோகிலம் பாகவதரின் மனைவியாக நடித்திருந்தார்.

இப்படியான தொடர் வெற்றியின் உச்சத்தில் பயணத்தில் மிகப்பெரிய தடைக்கல்லாய் வந்து விழுந்தது லட்சுமிகாந்தன் கொலைவழக்கு. நடிகர்கள் உள்ளிட்ட பிரபல நபர்களைப் பற்றி கொச்சையான மொழியில் ஆபாசமான கிசுகிசுக்களையும் அவதூறுகளையும் 'இந்து நேசன்' என்கிற மஞ்சள் பத்திரிகையில் எழுதி வந்த லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் பயணிக்கும் போகும் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இவர் மறுநாள்தான் மர்மமான முறையில் இறந்தார் என்கிற கருத்தும் உண்டு. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணணும் உண்டு. இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. அப்போது ஹரிதாஸ் திரைப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சமயம். ரசிகர்கள் அழுகையுடன் இத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர். அப்போது சென்ட்ரல் சிறைச்சாலையில் அடைபட்டிருந்த பாகவதர் எதிரே வால்டாக்ஸ் சாலையில் இருந்த கொட்டகையில் இருந்து காற்றில் மிதந்து வரும் இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டு மனம் வருந்தி அழுவாராம். எத்தகையதொரு துயரமான நிலை. பிறகு இந்த வழக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடுக்காக அனுப்பப்பட்ட பிறகு இருவரும் விடுதலை பெற்றனர். என்றாலும் இழந்த புகழையும் வெற்றியையும் பாகவதரால் மீண்டும் பெறவே முடியவில்லை. பின்பு வெளிவந்த இராஜமுக்தி உள்ளிட்ட (இதில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் வசனம் எழுதியிருந்தார்) சில திரைப்படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும் வெற்றி பெறவில்லை. ஏழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர் போன்ற அடைமொழிகளில் புகழ் அடைந்திருந்த தியாகராஜ பாகவதர் 1959-ல் காலமானார்.


தியாகராஜ பாகவதரின் சமகாலத்தில் ஏறத்தாழ அவருக்கு இணையாக புகழ் பெற்றிருந்த நடிகர், சின்னசாமி என்கிற இயற்பெயர் கொண்ட பி.யூ. சின்னப்பா. பாகவதரோடு ஒப்பிடும் போது தோற்றக்கவர்ச்சியற்றவர்தான். ஆனால் அதை தமது இசைத் திறமையால் கடந்து வந்தார். நடிகர் என்பதைத் தவிர சின்னப்பாவிற்கு இன்னொரு முகமும் இருந்தது. சிலம்பம், குஸ்தி, மல்யுத்தம் ஆகியவற்றில் சிறந்த பயிற்சி பெற்றவர். சுருள் பட்டா எனும் அக்காலத்து ஆபத்தான ஆயுதத்தை திறம்பட கையாளும் திறமை பெற்றவர். பாகவதரைப் போல திரைப்புகழ் இவருக்கு அத்தனை எளிதில் கிடைக்கவில்லை. இவரது தந்தையும் நாடக நடிகர் என்பதால் இயல்பாகவே இவரது ஆர்வமும் அது தொடர்பாகவே அமைந்தது. டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக்குழுவில் இருந்த அவர் பின்னர் மதுரை பாய்ஸ் கம்பெனியில் இணைந்தார். இந்தக் குழுவில்தான் கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர். இதில் எம்.ஜி.ஆர், ஸ்திரிபார்ட்டாக (பெண்வேடம்) இருந்தவர் என்பது சுவாரசியமான தகவல்.

ஜே.ஆர்.ரங்கராஜூ என்பவர் எழுதிய 'சந்திர காந்தா' எனும் நாடகத்தில் சின்னப்பா முக்கிய வேடத்தில் நடித்தார். போலி மடாதிபதி ஒருவரை அம்பலப்படுத்தும் இளவரசன் பாத்திரம். ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றார். ஜூபிடர் நிறுவனம் இந்த நாடகத்தை 1936-ல் திரைப்படமாக்கியது. நாடகத்தில் நடித்த அதே வேடத்தில் சின்னப்பா நடித்தார். படம் வெற்றி பெற்றது. என்றாலும் பிறகு நடித்த திரைப்படங்கள் சுமாராகவே வெற்றி பெற்றன. இதனால் வெறுப்புற்ற சின்னப்பா திரைத்துறையிலிருந்து விலகியிருந்தார். 1940-ல் அவருக்கு ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. பிரபல இயக்குநரான மாடர்ன் தியேட்டர்ஸ்  டி.ஆர்.சுந்தரம், Man in the Iron Mask என்கிற ஆங்கிலப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். ஒதுங்கியிருந்த சின்னப்பாவை அழைத்து நடிக்கச் செய்தார். உத்தமபுத்திரன் என்கிற பெயரில் அது தயாரானது. இதில் இரட்டை வேடத்தில் நடித்தார் சின்னப்பா. ஒரே தோற்றமுள்ள கதாபாத்திரம் இரட்டை வேடங்களில் நடித்து தமி்ழில் உருவாகிய முதல் திரைப்படம் இதுவே. இந்த நுட்பத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். படம் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து உருவாகிய 'ஆர்ய மாலாவும்' வெற்றி. இளங்கோவனின் அனல் பறக்கும் வசனத்தில் கண்ணாம்பாளுடன் நடித்த 'கண்ணகி' சாதனை வெற்றியை அடைந்தது.

சின்னப்பாவிற்கு என்று பிரத்யேகமான ரசிகர்கள் உருவாகினர். பாகவதர் ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன. இன்னும் சில நடித்த படங்கள் நடித்த சின்னப்பாவின் திரைப்பயணத்தில் 'ஜகதலப்பிரதாபன்' முக்கியமான படமாக அமைந்தது. இந்தப்படத்தில் ஐந்து வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். திரைப்படங்களில் தான் நடித்து ஈட்டிய பணம் முழுவதையும் வீடுகள் வாங்குவதில் செலவழித்தார் சின்னப்பா. 'இனி சின்னப்பா இந்தப் பிரதேசத்தில் வீடு வாங்க தடை செய்யப்படுகிறது" என்று அப்போதைய புதுக்கோட்டை மன்னர் அறிவிக்குமளவிற்கு அவரது வீடுகள் வாங்கி  குவிக்கும் வேகம் அமைந்தது. என்றாலும் இவரது குடும்பம் கடைசிக்காலத்தில் வறுமையையே சந்தித்தாக கூறப்படுகிறது. பிறகு வெளிவந்த திரைப்படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. ரசிகர்களின் ரசனை மாற்றம் காரணமாக இவரது நடிப்பு பாணியிலான படங்கள் பிறகு சுமாரான வரவேற்பையே பெற்றன. திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ரத்தவாந்தி எடுத்த சின்னப்பா 1951-ல் காலமானார்.

தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தை ஆக்ரமித்திருந்த தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ. சின்னப்பா எனும் இரு பெரும் சகாப்தங்களின் திரைப்பயணம் இவ்வாறான முடிந்தது. 1930-ல் இருந்து 1950 வரை வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான, சாதனை பரிந்த சில திரைப்படங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே தனித்தனி கட்டுரைகள் எழுதுமளவிற்கு அதனதன் அளவில் ஒவ்வொன்றுமே பிரத்யேகமானதும் முக்கியமானதும் ஆகும்.

நந்தனார் (1933) சதி லீலாவதி, பட்டினத்தார், மிஸ். கமலா (1936) தியாகபூமி, திருநீலகண்டர் (1939), சாகுந்தலா, உத்தமபுத்திரன் (பி.யூ. சின்னப்பா நடித்தது) (1940), அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (இது பின்னர் எம்.ஜி.ஆர் நடித்து 1956-ல் வெளியானது), ஆர்யமாலா, சபாபதி, வனமோகினி (1941), கண்ணகி, (1942) சிவகவி,(1943), பர்மா ராணி, மீரா, (1945) ஸ்ரீ முருகன், வால்மீகி (1946), மிஸ் மாலினி, நாம் இருவர் (1947), அபிமன்யூ, சந்திரலேகா, ராஜமுக்தி (1948), அபூர்வ சகோதரர்கள், நல்லதம்பி, வாழ்க்கை, வேலைக்காரி (1949), ஏழைபடும் பாடு, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, (1950)

இந்த வரிசையில் மிகுந்த பொருட்செலவில் உருவான சந்திரலேகாவின் வெற்றி வடஇந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அளவிற்கு  பிரம்மாண்டமானது. ஆண் நடிகர்களே பெறாத அளவிற்கு தாம் நடிப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற கே.பி.சுந்தராம்பாளின் படமான 'ஒளவையார்' 1953-ல் வெளியானது. ஒரு தனிப்பட்ட திரைப்படமாக எடுக்குமளவிற்கு சுந்தராம்பாளின் வாழ்க்கையே அத்தனை சுவாரசியமும் உருக்கமும் கொண்டது. பிரபல பாடகரான கிட்டப்பா மீது இவர் கொண்ட காதலும் எழுதிய கடிதங்களும் ஒரு காவிய சோகத்திற்கு ஈடானவை. இது தவிர வெங்கய்யா ரகுபதி, ராஜா சாண்டோ, முற்போக்கான தேசபக்திப் படங்களை எடுத்த கே.சுப்பிரமணியம், எல்லீஸ் ஆர் டங்கன் என்கிற ஆங்கிலேய இயக்குநர், கண்டிப்பான இயக்குநரான டி.ஆர்.சுந்தரம் போன்ற இயக்குர்களைப் பற்றிய தனித்தனியே பார்க்க வேண்டும்.

***

தமிழ் சினிமாவின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மிகச்சிறிய பகுதியையே இந்தக் கட்டுரையில் காண முடிந்தது. இதையும் தாண்டி இன்னும் பல திரைப்படங்களும் அதில் உறைந்திருக்கும் சுவாரசியமான தகவல்களும் உறைந்திருக்கும் கண்ணீரும் கைத்தட்டலும் வெற்றியும் தோல்வியும் ஆகியவை பற்றி இன்றைய தலைமுறை தேடியாவது அறிய வேண்டும். இன்று காணும் தமிழ் சினிமாவிற்குப் பின் எத்தனை மகத்தான பயணங்கள் இருந்திருக்கின்றன, மகத்தான நபர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தேடித் தேடித் அறிய வேண்டிய சுவாரசிய சுரங்கங்கள். தேடிக் கண்டடையுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

'தி இந்து' பொங்கல் மலரில் 'பாகவத நடிகர்கள்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. அதன் சுருக்கப்படாத வடிவம் இது (நன்றி: தி இந்து)
 
suresh kannan

2 comments:

Vetirmagal said...

I had missed reading your blog for many months. What a pleasure to start all over again. Thanks a lot for this wonderful writing. Hope to read many more.

Unknown said...

Intha title la part 2 varungala