Thursday, December 11, 2014

சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்



நண்பர்களே,

ரஜினிகாந்த் நடித்து 2007-ல் வெளிவந்த சிவாஜி திரைப்படம் வெளியிடப்படும் தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரையிது. இந்த 2014-ன் இறுதியில் வெளியாகும் லிங்கா திரைப்படத் தருணத்திலும் இக்கட்டுரை பொருத்தமாக அமைந்திருப்பதாகவே கருதுகிறேன். 

***

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பரபரப்பை ஏற்படுத்தவோ அல்லது ரஜினி ரசிகர்களை சங்கடத்திலோ, கோபத்திலோ ஆழ்த்துவதற்காகவோ இந்த பதிவு எழுதப்படவில்லை. அது என் நோக்கமும் கிடையாது. ஆபாச வசைச் சொற்களைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்த்திருந்தும் இந்தப்பதிவு எழுதப்படுவதின் நியாயத்தை, திறந்த மனதுடன் வாசிக்கும் எவரும் பதிவின் இறுதியில் உணர்வார்கள் என்று நிச்சயமாகவே நம்புகிறேன்.

()

தமிழில் திரைப்படங்கள் தோன்றும் போது அது அப்படியே நாடகத்தின் கூறுகளை, தாக்கங்களை முழுவதுமாக உள்வாங்கி பிரதிபலித்தது. காட்சியமைப்புகள், ஆடை அணிகலன்கள், அரங்க அமைப்புகள், இசைப் பாடல்கள் என்று நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏதுமில்லை. சுருங்கக்கூறின் நாடகங்களின் சுருள்வடிவமே திரைப்படம் என்பதாக இருந்தது. காளிதாஸ் (1931) ஹரிச்சந்திரா (1932) சீதா கல்யாணம் (1933) தொடங்கி புராணங்களின் உபகதைகளை கொண்டு தமிழ்ச் சினிமா பயணித்தது. பின்பு எம்.கே.தியாகராஜ பாகவதர், (ஹரிதாஸ் - 1944) பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா போன்ற இசையும் நடிப்புத்திறமையும் இணைந்த நாயக நடிகர்களின் துணை கொண்டு வளர்ந்தது. இடையே விடுதலைப் போராட்டத்தின் எதிரொலியாக காலனியாதிக்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் (நாம் இருவர் - 1947) எதிர்த்து திரைப்படங்கள் தோன்றின.

ஏ.பி.நாகராஜன் போன்றோர்களின் புராண மறுஉருவாக்க படங்களும் (திருவிளையாடல் - 1965) கண்களைப் பிழிய வைக்கும் பீம்சிங்கின் மிகை உணர்ச்சிப் படங்களும் (பாசமலர் 1964) வெளிவந்தன. புராணப்படங்கள் தேய்ந்து போய் சமூகக் கதைகள் (நல்லவன் வாழ்வான்; கெட்டவன் வீழ்வான் என்பதை அடிச்சரடாகக் கொண்டு) பெரும்பாலான படங்கள் வெளிவந்தன. இதிலிருந்து மாறுபட்டு ஸ்ரீதர் (தேன்நிலவு 1961) கே.பாலச்சந்தர் (சர்வர் சுந்தரம் 1964; நாணல் - 1965) போன்றவை வெளியாகின. தமிழ்த்திரையுலகின் முதல் கலகக்குரலாக (அன்றைய சூழ்நிலையில்) கே.பாலச்சந்தரை குறிப்பிடுவேன். அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்கள், மக்களை கனவுலகிலிருந்து மீட்டு யதார்தத்தின் வெளிச்சத்திற்கு அழைத்து வந்த ஆரம்பப் புள்ளிகளாக அமைந்து சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.

()

1975-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை "தமிழ்த்திரையுலகின் பொற்காலம்" எனக்கூறலாம். பதினாறு வயதினிலே, சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), அவள் அப்படித்தான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978) அழியாத கோலங்கள், உதிரிப்பூக்கள், நூல்வேலி, பசி, (1979), இவர்கள் வித்தியாசமானவர்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நிழல்க்ள், மழலை பட்டாளம், மூடுபனி, (1980) என்று களம், பின்னணி, திரைக்கதையமைப்பு, இசை போன்ற பிரதான துறைகளில் வித்தியாசமான அமைப்பை கொண்டு வந்திருந்தன. எல்லா காலகட்டத்திலும் வணிக சினிமா, ரசனை சார்ந்த சினிமா என்பது தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்தக் காலகட்டத்திலும் பெரும்பான்மையான ரசனை சார்ந்த சினிமா உருவாகின. இதன் மூலம் சர்வதேச திரைப்படங்களைப் பற்றின தேடலும், விவாதங்களும், விழிப்புணர்வும் சாத்தியமாக்கியது. நல்ல திரைப்படங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதால் வித்தியாசமான முயற்சிகளை கொடுக்கும் துணிவு இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

திரைவிமர்சகர்கள் தமிழ்த்திரையுலகின் வரலாற்றை எழுதும் போது இந்த காலத்தை ஏக்கப்பெருமூச்சுடன் நினைவு கூர்கிறார்கள். இந்தப் படங்கள் பொதுமக்களின் பரவலான கவனத்தைப் பெற்றதோடு வணிக ரீதியான வெற்றியையும் பெற்றன. இதே நிலை தொடர்ந்திருந்தால், தமிழ்த்திரையுலகத்தின் முகமே மாறிப் போய் மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்கள் பெற்றிருந்த ரசனை வளர்ச்சியை நாமும் பெற்றிருக்கக்கூடும்.

ஆனால் 1982-ல் ஏவி.எம்.எம். நிறுவனத்திலிருந்து வெளிவந்த "சகலகலா வல்லவன்" என்கிற திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த வளர்ச்சியை அடியோடு மாற்றியது. உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்போடு இதை ஒப்பிடலாம். குறிப்பிட்ட படத்தின் வணிகரீதியான மிகப் பெரிய வெற்றி மேற்சொன்ன சூழ்நிலையை குரூரமாக குலைத்துப் போட்டது. ஆபாசம், வன்முறை, நாயக புகழ்ச்சி, மிகை உணாச்சி, பாசாங்கு என்று எல்லாவிதமான செயற்கைத்தனங்களுடன்தான் பிற்காலத்திய படங்கள் வெளிவந்தன. இடையிடையில் மாற்று முயற்சிகள் வந்தாலும் அவை பெரும்பான்மையான கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழ் சினிமாவின் முக்கியமான மறுமலர்ச்சிப் படமான "நாயகனை" (1987) உருவாக்கிய மணிரத்னம், பிற்பாடு "தளபதி" (1991) போன்ற வணிகரீதியான சினிமாவை கொடுக்க நேர்ந்தது. தரமான திரைப்படங்களை பார்த்து உள்வாங்கி வெளிவந்த திரைப்படக் கல்லூரி மாணவர்களும் (ஊழை விழிகள் - இதே போன்ற படங்களையே அளிக்க முடிந்தது. விக்ரமன் போன்றோரது படங்கள் மோசமான முன்மாதிரிகளாகவே இருந்தன.

()

இப்போதைய காலகட்டத்திற்கு திரும்புவோம். தொடர்ந்து "ஸ்டீரியோ டைப்" படங்களை பார்த்து சலித்துப் போனதும், சர்வதேச சினிமா குறித்து அறிவுஜீவிகள் தவிர்த்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு எழுந்ததாலும், ஊடக வளர்ச்சி காரணமாக சினிமாவின் தொழில்நுட்பம் குறித்து பாமரனும் அறிய முடிந்ததாலும் மக்கள் மாற்று முயற்சிகளை மெலிதாக வரவேற்றனர். காதல் என்று ஆரம்பிக்கிற பெயரில் நிறைய கண்ராவிப் படங்கள் வந்திருந்தாலும், பாலாஜி சக்திவேலின் "காதல்" திரைப்படம் (2004) ஒரு பெரிய ஆசுவாசமாக அமைந்தது. நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை இளம் இயக்குநர்களுக்கு பிறந்தது. இதனின் சமீபத்திய தொடர்ச்சியாக அழகிய தீயே, வெயில், மொழி, பருத்தி வீரன் என்று குறைவான வணிக சமரசங்களோடு படங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றியையும் பெற முடிந்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் முன் குறிப்பிட்ட பொற்கால சூழ்நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. (வணிகரீதியான அம்சங்கள் குறைவாக இருந்தாலே, அது நல்ல படம் என்று நாம் பேச ஆரம்பித்திருப்பது துரதிர்ஷ்டவசமானதுதான் என்றாலும், நிஜமாகவே நல்ல படங்களை எடுப்பதற்கு இவைகளை ஆரம்ப முயற்சிகளாக கொண்டு வரவேற்கலாம்)

ஆனால் இந்த ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை சிவாஜி திரைப்பட வரவு குறித்த அதீத பரபரப்பு, முன்னர் குறிப்பிட்ட அதே மாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சகலகலா வல்லவன் போன்றே சிவாஜியும் ஏவி.எம். நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது என்பதுதான் நகைமுரண். சினிமாப் பத்திரிகைகள் தொடங்கி ஜோதிடப் பத்திரிகைகள் வரை எதுவுமே "சிவாஜி"யைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது என்கிற அளவிற்கு இத்திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (இதே போன்று முன்னர் பரபரப்பை ஏற்படுத்தின "பாபா"வின் கதியும் நினைவிற்கு வருகிறது). வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் வணிக ரீதியான விற்பனையின் தொகை பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. ஆடியோ விற்பனையே 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனையோ வணிகரீதிப்படங்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கவில்லையா, சிவாஜி வருவதால்தான் ஆக்கப்பூர்வமான சூழ்நிலை மாறிவிடுமா? என்னய்யா அபத்தமாக இருக்கிறது? என்று உங்களில் சிலருக்கு தோன்றக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நான் அஞ்சுவது இந்தப்படத்தின் பரபரப்பு குறித்தும், ஆர்ப்பாட்டம் குறித்தும்தான். ஒருவேளை இந்தப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால், மீண்டும் வணிகரீதியான படங்களுக்கு மவுசு கூடி, வணிகரீதி இயக்குநர்கள் பிசியாகி விடுவார்கள். மாற்று முயற்சிகளின் பிரகாசம் மங்கிப் போய், நாளடைவில் தேய்ந்து போய்விடவும் வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மீண்டும் இந்த சூழ்நிலை மலர எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?


()

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வருடத்திற்கு சுமார் 1000 படங்கள் தயாரிக்கும் ஒரு தேசத்திலிருந்து சர்வதேச தரத்திற்கு இணையான படங்களின் சதவீதம் மிக மிகக்குறைச்சலே. ஆஸ்கருக்காக ஏங்கிப் போய், அது கிடைக்காத விரக்தியில், அது உலகத்தரம் அல்ல, அமெரிக்கத்தரம் என்று பேசுவது "சீசீ இந்தப் பழம் புளிக்கும்" என்கிற கதையைத்தான் நினைக்க வைக்கிறது. ஆஸ்கர் விருது கிடைப்பது ஒரு புறம், அதன் நாமினேஷன் பட்டியிலில் இடம் பெறுவதற்கே நாம் மல்லாட வேண்டியிருக்கிறதே? cannes film festival-ல் திரையிடுவதற்கு கூட பெரும்பான்மையான திரைப்படங்கள் லாயக்கில்லாதவை. இந்த நிலை குறித்து நாம் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா? ஈரான் போன்ற கைக்குட்டை தேசங்கள் கூட சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனிப்பை பெறும் போது நம் நிலை என்ன?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி" என்று பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதில் மாத்திரம் புண்ணியமில்லை. காலத்திற்கேற்ப நம் தரத்தையும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் ரசனை மேம்பாடும், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பும் மேம்பாடும் முக்கியமானவை. எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

(மீள்பதிவு) 

suresh kannan

No comments: