Sunday, November 16, 2014

மெட்ராஸ் - தகர்க்கப்பட வேண்டிய சுவர்கள்




சுவர்கள் மனிதர்களுக்கான அந்தரங்க வெளிகளை உறுதிப்படுத்துபவை. பாதுகாப்பை ஏற்படுத்துபவை. அதே சமயத்தில் அவர்களுக்குள் பிரிவினைகளையும் உண்டாக்குபவை. பலவிதமான வண்ணங்களையும் செய்திகளையும் தாங்கியவை. பெர்லின் சுவர் முதற்கொண்டு உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் வரை அவைகளுக்கான அரசியல் பின்னணிகளும் இடிக்கப்பட வேண்டிய காரணங்களும் உண்டு.

அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு சுவர், அதன் பின்னுள்ள அரசியல், அதைக் கைப்பற்ற, தக்கவைத்துக் கொள்ள தலைமுறை தாண்டியும் மோதிக் கொண்டேயிருக்கும் சக்திகள்... இவற்றின் பின்னணியில் கைவிட முடியாத தமிழ் சினிமாவின் சில சம்பிதாயங்களோடு  அடித்தட்டு மக்களுக்கான ஓர் அரசியல் சினிமாவை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். பல்லக்குத் தூக்கிகள் காலம்பூராவும் எவரையாவது சுமந்து கொண்டேயிருப்பது அவசியம்தானா என்கிற உண்மையை அவர்களே கேட்டுக் கொள்ளும்படியான சிந்தனையைத் தூண்டும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். இதுவரையிலும்  ஆதிக்கச் சாதிகளால் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் உழைப்புச் சுரண்டல்களுக்கு ஆட்பட்டு பலியாடுகளாக இருக்கும் விளிம்புகள் மையத்தை நோக்கி நகர வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார். அறியாமை எனும் இருளில் இருந்து அகல கல்வி என்பதையும் தாண்டி சமூக அரசியலையும் அது சார்ந்த விழிப்புணர்வையும் பெற வேண்டிய தேவையை பதிவு செய்திருக்கிறார்.

வடசென்னையின் கலாசாரத்தை பின்புலமாகக் கொண்டு அதன் கச்சாத்தன்மையோடு இதுவரை எந்தவொரு தமிழ் திரைப்படமும் உருவாக்கப்படவில்லை என்பது, பிறந்ததில் இருந்தே அந்த நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவன் என்கிற முறையில் என்னுடைய நீண்ட கால மனக்குறையாக இருந்தது. அவ்வாறு சித்தரிக்கப்பட்டதாக முன்னர் வெளியான சில திரைப்படங்களைப் பற்றி  கூறப்பட்டாலும் அவை பாரதிராஜா தம்முடைய திரைப்படங்களில் பகற்கனவுகளின் கூறுகளோடு சித்தரித்த கிராமங்களைப் போலவே போலித்தனமானவை. சில தேசலான அடையாளங்களை பாவனை  கொண்டு பாவனை செய்தவை.  அதுகாறும்  முந்தைய திரைப்படங்கள்  ஏற்படுத்தி வைத்திருந்த தேய்வழக்குகளிலிருந்து பெரிதும் மீறாதவை. சோ, லூஸ் மோகன் முதற்கொண்டு கமல்ஹாசன் வரை பேசும் பாணியே வடசென்னை  மக்களின் தமிழ் என்று நிறுவப்பட்டுக் கொண்டும் நம்பப்பட்டுக் கொண்டுமிருந்தது.  ('பொல்லாதவன்' திரைப்படத்தில் குறுகிய நேரத்தில் கடந்து போகும் செண்ட்ராயன் பேசும் ஒரு வசனம் மாத்திரமே அதுவரையான தமிழ் சினிமாவில் நான் கேட்ட அசலான வடசென்னையின் குரல்). இவ்வகையான  போலித்தனங்களிலிருந்து விலகி தனது மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் சமகால வடசென்னையின் கலாசார முகத்தை இன்னமும் துலக்கமாக்கி இயன்ற வரையில் அசலாக சித்தரித்து சில அடிகள் முன்னே நகர்ந்து சென்ற காரணத்திற்காக இயக்குநர் இரஞ்சித்தைப் பாராட்டலாம்.

பொதுவாக சென்னை என்றாலே அதுவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் எல்.ஐ.சி. கட்டிடத்தையும் மெரினா கடற்கரையையுமே தமிழ் சினிமாவின் காமிராக்கள் காட்டிக் கொண்டிருந்தன.  சென்னையின் வடதுபுறம் அதன் பார்வைக்கு படவே படாது. அப்படியே வடசென்னை பக்கம் திரும்பினாலும் அது ரவுடிகளும் வன்முறையாளர்களும் அரசியல் அடியாட்களும் பல்விதமான குற்றங்களை புரிபவர்களும் பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்களும் பிச்சையெடுப்பவர்களும் என்று அதை உதிரிகள் நிறைந்த ஒரு லும்பன் சமூகமாகத்தான் இதுவரை சித்தரித்திருக்கிறது. இதிலிருந்து விலகி அங்கிருந்து  ஒரு சாஃப்ட்வேர் நிறுவன இளைஞன் வருகிறான் என்கிற நடைமுறை உண்மையின் மூலம் அதை முன்னேறிக் கொண்டிருக்கிற சமூகத்தின் அடையாளமாக சித்தரித்த விதம் சிறப்பானது. குடித்து விட்டு வீட்டுப் பெண்களை ஓயாது அடித்து ஆபாச வசைகளை வீசும் ஆண்களாகவே காட்டப்பட்டுக் கொண்ட வடசென்னையின் அடித்தட்டு சமூகத்தில், அங்கும் எல்லா சமூகத்தையும் போலவே ஊடலும் கூடலும் அன்பும் கொண்ட ஓர் இயல்பான ஆண் கொண்ட குடும்பத்தை அதன் அழகியலோடு  காட்சிப்படுத்தியதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். வறுமையின் துயரமும் அழுகையுமாக சித்தரிக்கப்பட்டதிலிருந்து விலகி, கால்பந்தும் கேரமும் விளையாடும் இளைஞர்கள், மேற்கத்திய நடனம் பயிலும் சிறுவர்கள், சிரிப்பும் கும்மாளமுமாக ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளும் இளைஞர்கள் என்று ஒரு கொண்டாட்ட சமூகமாக அதை முன்வைத்ததற்காகவும்.

***

அடித்தட்டு சமூக இளைஞர்களை அதுவரையான தமிழக அரசியல் எப்படியெல்லாம் சுரண்டிக் கொண்டிருந்தது என்பதை முன்வைத்து இதுவரை சில அரசியல் சினிமாக்கள் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், சுரேஷ் கிருஷ்ணாவின் சத்யா (ராம்கோபால் வர்மாவின் 'இந்தி' சத்யாவும்) செல்வராகவனின் புதுப்பேட்டை போன்று சில படங்கள். ஏறக்குறைய அதே மாதிரியான கதைக்களனைத்தான் 'மெட்ராஸூம்' கொண்டிருக்கிறது. ஆனால் முந்தைய திரைப்படங்களில் அந்த இளைஞர்களின் பின்னணியைப் பற்றிய துல்லியமான சித்திரம் எதுவுமிருக்காது. மேலும் அரசியல் கட்சிகளையும் ஜாக்கிரதையாக மஞ்சள் கட்சி. பச்சை கட்சி என்று ஒரு மாதிரி மையமாக குறிப்பிட்டு ஒப்பேற்றியிருப்பார்கள். ஆனால் மெட்ராஸ்-ஸின் புள்ளி எங்கே விலகியும் தனித்தும் நிற்கிறது என்றால் இதில் வரும் பிரதான பாத்திரங்களான அன்புவும் காளியும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான தடயங்கள் படத்தில் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன. 'தமிழ் தமிழ் -னு சொல்றவங்க எல்லாம் சாதி, மதம் -னு வந்தா மட்டும் கத்தியை தூக்கிடறாங்க' என்று கடந்து போகும் ஒரேயொரு வசனம், அதுவரையான தமிழக அரசியலின் மீது பலத்த விமர்சனமாகவும் அடியாகவும் விழுகிறது.  இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் இயல்பாக தேசிய அரசியலின் கைகளில் இருந்த அதிகாரத்தை திராவிடக் கட்சிகள் மொழி, இன உணர்வுகளைப் பயன்படுத்தி கைப்பற்றி அடித்தட்டு சமூகத்தை ஓட்டு வங்கியாகவும் அடியாட்களாகவும் தேர்தல்பணி தொண்டர்களாகவும் உபயோகப்பட்டுக் கொண்டு வந்ததையும், அதன் பிறகு சாதிய உணர்வுகளை பயன்படுத்தி மேலெழுந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் கலவரங்களுக்கு காரணமாக இருந்து தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மீது நிகழ்த்திய வன்கொடுமைகளையும் அந்த ஒற்றை வசனம் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இந்த வன்முறைகளிலிருந்து விடுபடவும் சமூகத்தில் மேம்படவும் தாழ்த்தப்பட்ட சமூகமானது சமூக அரசியலை கற்பதன் மூலம் ஒன்று திரண்டு அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது ஒட்டுமொத்தமான கச்சிதமான செய்தியாக இத்திரைப்படத்தில்  வெளி்ப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படம் 1990-களிலிருந்து துவங்குவது ஒருவகையில் மிகப் பொருத்தமே. தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது 1989-ல். வி.பி. சி்ங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை செய்தது 1990. தமிழகத்தில் தலித் சமூகத்தை சார்ந்த அரசியல் கட்சிகள் ஒரு பெரும்சக்தியாக மேலெழுந்ததும் அடையாளம் காணப்பட்டதும் 1990-களில். நவீன தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்பது ஒரு வகைமையாக உருவாகியதும் தொன்னூறுகளிலேயே நிகழ்ந்தது. உயிர்மையின் கடந்த இதழ் கட்டுரையொன்றில் மராத்திய சினிமாவான ஃபன்றி திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது  ஒரு கால கட்டத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் தலித் வகைமையிலான படைப்புகள் பரவலாக அடையாளங் காணப்பட்டதைப் போல இடைநிலைச் சாதிகளின் பிம்பங்களை விதந்தோதிக் கிடக்கும் தமிழ் சினிமாவில் தலித் சினிமா உருவாக வேண்டியதின் அவசியத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதை சாத்தியப்படுத்தும் நம்பிக்கை தரும்  துவக்க அடையாளமாக 'மெட்ராஸ்' உருவாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படமான 'அட்டகத்தி'யும் தலித் சமூகத்தின் பின்புலத்தில் உருவாகியிருந்தாலும் அதன் மையம் காதல் குறித்தது. 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' என்று பம்மாத்து செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போலித்தனமான மதிப்பீடுகளை தனக்கேயுரிய பகடிகளுடன் கலைத்துப் போட்டது அத்திரைப்படம். ஆனால் மெட்ராஸ் அதிலிருந்து நகர்ந்து அரசியல் பற்றின உரையாடலை முன்வைக்கிறது.

வணிக சினிமாவிற்கும் கலை சார்ந்த சினிமாவிற்குமான இடையிலான புள்ளியில் இயங்குகிறது மெட்ராஸ். ஒவ்வொரு காட்சிக் கோர்வையும் அதன் சிறப்பான துவக்கமும் நிறைவுமாக கச்சிதமாக திட்டமிடப்பட்ட அழகியலுடன் நகர்கின்றன. சட்டகங்களில் நிறைந்திருக்கும்  முகங்கள் அதனதன் முக்கியத்துவத்துடனும் இயல்புடனும் பதிவாகியிருக்கின்றன. அன்பு மற்றும் காளி என்கிற இரு இளைஞர்களின் வாழ்க்கைக்குள் சென்று திரும்பிய உன்னத அனுபவத்தை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம். கார்த்தி இத்திரைப்படத்தின் நாயகனாக அறியப்பட்டாலும் துணைப்பாத்தி்ரமாக வரும் அன்புவே (கலையரசன்) படத்தின் முற்பகுதி முழுதும் நிறைந்திருக்கிறான். ஒரு குறிப்பிட்ட காட்சியில் கார்த்தி ஏதோ அட்மாஸ்பியருக்காக நிற்க வைக்கப்பட்ட உதிரிப்பாத்திரம் போல் பின்னணியில் நின்று கொண்டிருக்க அன்புவும் மாரியும் பிரதானமாக உரையாடும் காட்சியைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலான பிரேம்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் பஞ்ச் டயலாக் நாயகர்களின் சினிமாவே இங்கு  தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் போது இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சினிமாவைக் காண ஆறுதலாக இருக்கிறது.

அது மாத்திரமல்ல, பிரதான பாத்திரமான காளியும் (இறுதிக் காட்சியைத் தவிர) அவனுடைய நாயகத்தன்மை நீக்கம் செய்யப்பட்ட ஓர் இயல்பான மனிதனாகத்தான் பதிவாகியிருக்கிறான். அவனுக்கு காதலிக்க பெண் கிடைப்பதில்லை. பெண்களுடன் பழக அவனுக்குத் தெரியவில்லை. திருமணத்திற்காக பார்க்கப்படும் பெண்களையெல்லாம் அவனது தாய் ஏதோவொரு சொத்தையான காரணம் சொல்லி நிராகரிக்கிறாள். தனக்குத் திருமணமே ஆகாது என்று அவனுக்குத் தோன்றி விடுகிறது. தான் விரும்பிய பெண் தன்னை நிராகரித்து விட்டாள் என்பதற்காக குடித்து விட்டு புலம்பி அழுகிறான். பலி வாங்கும் சுவர் என்று நம்பப்பட்ட இடத்தின் முன் தனது பைக் நின்று போன விநோதத்தை எண்ணி உள்ளூர அச்சம் கொள்கிறான். தற்செயலாக ஒருவனை கொன்று விட நேர்ந்த பிறகு 'அய்யோ.. நான் ஜெயிலுக்கு போகணுமே.. என் எதிர்காலமே வீணாகி விட்டதே' என்று அழுகிறான். தன்னுடைய அம்மா சொல்லிதான் தான் விரும்பியவள் தன்னை காதலித்தாள் என்பதை பிறகு அறிய அசட்டுச்சிரிப்புடன் அதை ஏற்கிறான். நாயகர்களும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட  மிகைப்படுத்தப்பட்ட அபத்தங்களும் கோலோச்சுகிற தமிழ் சினிமாவில் இப்படியான சித்தரிப்புகள் மிக அபூர்வமான விஷயம்.

***

'இந்த நிமிஷத்தை சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்' என்கிற இயல்புவாத தன்மையோடு இயங்குகிறவன் காளி. சட்டென்று கோபம் கொள்ளக்கூடியவனாக இருந்தாலும் புறவடிவங்கள் சார்ந்தும் உணர்ச்சி சார்ந்தும் அரசியலை அணுகுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அவனுடைய உயிர்நண்பன் அன்பு. தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்காக உண்மையாக உழைப்பவன். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய முயலும் என்கிற லட்சியவாத தன்மையோடு இயங்குகிறவன். சுவரைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் குறியீடாக எண்ணுபவன். அன்புவிற்கு உரிய அரசியல் நிதானமும் முதிர்ச்சியும் காளிக்கு இல்லை. இவர்களிடையே நிகழும் முரணியக்கம்தான் படத்தின் முதற்பகுதியை நகர்த்திச் செல்கிறது. அன்புவைப் போன்ற லட்சியவாத தொண்டர்கள் உலகமயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேநீர் மாத்திரம் குடித்துக் கொண்டு தேர்தல் பணிகளை உற்சாமாக செய்த அர்ப்பணிப்பு உணர்வு சார்ந்த தொண்டர்கள் முந்தைய காலத்தில் இருந்தார்கள். அரசியலும் ஒருவகையான மிகச்சிறந்த வணிகம் என்பதைப் புரிந்து கொண்ட மக்களும்  இன்று அதற்கேற்பதான் எதிர்வினை புரிகிறார்கள்.

இத்திரைப்படத்தினுள் புழங்கும் மனிதர்கள் ஏறத்தாழ அசலான வாழ்க்கைக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். 'காளியம்மனுக்கு வேண்டி வரம் வாங்கி வந்த புள்ளடா நீ' என்று தொண தொணத்துக் கொண்டேயிருக்கும் காளியின் அம்மா (என்னுயிர் தோழன் நாயகி ரமா), இவருடைய வாய்க்குப் பயந்து அடங்கும் கணவர், வெற்றிலைபாக்கு வாங்க காசு கிடைப்பதற்கேற்ப எதிர்வினையாற்றும் பாட்டி, "லேட்டா கல்யாணம் பண்ணா உனக்குப் பொறக்கற குழந்த தாத்தா -ன்னு தான் கூப்பிடும்' என்று கலாய்க்கிற நண்பர்கள், பேசுவது புரியாவிட்டாலும் உடல்மொழியாலேயே கவர்கிற, காவல்துறையின் வன்கொடுமை காரணமாக மனநிலை பிறழ்ந்த ஜானி, (ஹரிகிருஷ்ணன்) கடவுள்மறுப்பு கொள்கையுடைய தனித்தன்மையுடன் கூடிய நாயகி, (காத்ரின் தெரசா), அவளுக்கு தோசை சுட்டுப் போடுகிற கட்சிக்காரர் அப்பா, உடன்பிறப்புகளையும் ரத்தத்தின் ரத்தங்களையும் நினைவுப்படுத்துகிற வசனம் போல  "நீ என் புள்ள மாதிரிடா" என்று நெக்குருகி பிறகு  துரோகம் செய்கிற அரசியல்வாதி மாரி, "எங்க அப்பா படத்தை எப்படியாவது சுவத்துல வரைஞ்சுடணும்" என்று அது குறித்த ஏக்கத்திலேயே தொடர்ந்து இயங்கும் இன்னொரு அரசியல்வாதி கண்ணன், அவருடைய மகன் பெருமாள், 'இந்த ஏரியாவிலேயே நான்தான் கெத்தா இருக்கணும்' என்கிற குறிக்கோளுடன் அரசியல் அடியாளாக இயங்குகிற விஜி,  'நீ குத்துக்கல்லு மாதிரி இருந்தியன்னா என் தலைவனுக்குத்தான் முத்தம் கொடுக்கணும்" என்று கணவனை சீண்டுகிற மேரி (ரித்விகா), பெற்றோரின் ரொமான்ஸை பக்கத்து வீட்டு மாமாவிடம் போட்டுக் கொடுக்கும் சிறுவன் ரொனால்டோ, 'சுவத்தை எப்படியாவது பிடிக்கணும்டா" என்கிற குறிக்கோளுடன் துரோக அரசியலுக்குப் பலியாகும் அன்பு, (கலையரசன்), 'சுவத்தைப் பிடிச்சுட்டா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடுமா" என்று யதார்த்தம் பேசுகிற காளி (கார்த்தி) என்று ஏறத்தாழ அத்தனை பாத்திரங்களுமே பார்வையாளர்களின் மனதில் நிரந்தரமாக உறைந்து விடுவது தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் நிகழ்கிற அதிசயம்.

இத்திரைப்படத்தின் பற்றி இசை பற்றி பிரத்யேகமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புதிய அலை இயக்குநர்களைப் போலவே அவர்களுடன் இணைந்து கவனிக்கத்தக்கதொரு  இசையமைப்பாளராக உருவாகிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அவர்களின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு உறுதுணையாகவும் அவைகள் புதிய வண்ணங்களில் தோற்றம் கொள்வதற்கும் இவரது இசை முக்கியமான காரணியாக இருக்கிறது. தமிழ் திரையிசையில் ஒவ்வொரு காலகட்டத்தையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செய்து வந்ததைப் போலவே வருங்கால தமிழ் சினிமாவை ஆக்ரமிப்பு செய்யப் போகும் தனித்தன்மையுடனும் புத்துணர்ச்சியான படைப்புகளுடன் மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறார் சந்தோஷ். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் பாடல்கள் என்பவை திணிக்கப்பட்டவைகளாகவும் வேகத்தடைகளாகவும் அமைந்து எரிச்சலூட்டுபவை. ஆனால் இத்திரைப்படத்தில் பாடல்கள் மிக இயல்பான தருணங்களில் மிக அழகாக பொருந்தியிருப்பதை கவனித்தேன்.

கானா பாடல் என்பது அதுவரை பெரும்பாலும் குத்தாட்டப்பாடல்களாகத்தான் தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் யதார்த்தத்தில் அவை இறப்பு,பிறப்பு, துயரம், மகிழ்ச்சி, தத்துவம், காதல், அது சார்ந்த தோல்வியின் சோகம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் பல்வேறு தருணங்களில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் மக்கள் தங்களின் உணர்வுகளை எளிய வரிகளோடும் இசையோடும் வெளிப்படுத்தும் இசையது. கிராமங்களில் உருவாகும் நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று இது சென்னையின் பிரத்யேகமான அடையாளம். இது இத்திரைப்படத்தில் ஏறத்தாழ அத்தன்மையின் இயல்போடு பதிவாகியிருக்கிறது. புளியந்தோப்பு பழனி, மரண கானா விஜி, கானா பாலா என்று ஒரு காலத்தில் அடித்தட்டு மக்களின் சூழலில் மாத்திரமே ஒலித்துக் கொண்டேயிருந்த இசை இன்று மைய நீரோட்ட வெளிகளில் ஒலிக்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அது போலவே இதன் பின்னணி இசையும். தேவையான இடங்களில் மாத்திரம் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டு முக்கியமான தருணங்களின் காட்சிகள் அழுத்தமாக பதிவாக பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது. படம் முழுவதும் ஏறக்குறைய ஒரு கதாபாத்திரமாக வரும் சுவரும் அதில் பதியப்பட்டிருக்கும் உருவமும் (கவிஞர் ஜெயபாலன்) பார்வையாளர்களின் மனதில் பிரத்யேகமாக பதிவாக அதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் கருப்பொருள் இசை (Theme Music) உதவுகிறது. 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா' என்கிற அற்புதமான படிமங்களுடன் கூடிய வரிகள் இதற்கு துணையாக நிற்கின்றன.

அதைப் போலவே முரளியின் ஒளிப்பதிவும். பறவைக்கூடுகள் போல் ஒடுங்கியிருக்கும் வீடுகளின் சிறிய இடத்தில் வெளிப்படும் மனிதர்களின் காதலையும் கோபங்களையும் ஆவேசங்களையும் துயரங்களையும் இயல்புமாறாமல் பதிவாக்கியிருக்கிறது. வடசென்னையின் நிலப்பரப்பும் அதன் கலாசாரமும் முழுமையான அளவில் இல்லையென்றாலும் சாத்தியமான அளவில் வெளிப்பட்டிருக்கிறது. சண்டைகளும் துரத்தல்களுமான இரவுக் காட்சிகள் அதன் பிரத்யேகமான அழகுடனும் இயல்புடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (அச்சமயங்களில் அது தனித்து விடப்பட்ட நகரம் போல் இருப்பதுதான் முரணாக இருக்கிறது). ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரவீண், காட்சிகளின் தாள லயம் கெடாமல் ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். சமகால சினிமாக்களில் தமிழ் நவீன இலக்கியத்தோடு தொடர்புள்ளவர்கள் அதிகம் பங்குபெறுவது மகிழ்ச்சி. அவ்வகையில் இத்திரைப்படத்தில் எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா இணை இயக்குநராக தன் பங்களி்ப்பை செய்திருக்கிறார்.

மிகுந்த பொருட்செலவை கோரி நிற்கிற கலை சினிமா என்பதால் அது தொடர்பான சமரசங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதுதான். என்னதான் இயக்குநர் நுண்ணுணர்வுகளுடன் கூடிய திறமைசாலியாக இருந்தாலும் அவரது கனவுப் படைப்பிற்கும் சமரசங்களுக்கும் உள்ள இடைவெளிதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. அவ்வாறே இந்த இடைநிலை சினிமாவில் சில சமரசங்களும் குறைகளும் இருக்கலாம். உதாரணமாக நாயகனும் நாயகியும் இத்திரைப்படத்தின் பின்புலத்திற்கு பொருந்துகிற தோற்றத்தையும் உடல்மொழியையும் கொண்டிருக்கவில்லை. 'அட்டகத்தி'யில் தினேஷ் கச்சிதமாகப் பொருந்தியது போல இதில் நிகழவில்லை. மேரியைப் போல கலையரசி பிரகாசிக்கவில்லை. என்றாலும் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயன்ற அளவிற்கான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் கார்த்தி நடித்திருக்காவிட்டால் இத்திரைப்படம் இத்தனை பரவலான கவனத்தைப் பெற்றிருக்குமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. நாயகியின் அந்நிய தோற்றம்  குறித்தும் விமர்சனங்கள் எழுகின்றன. ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இயக்குநர் இரஞ்சித் இது குறித்து விளக்குகிறார். 'இத்திரைப்படத்தை தெலுங்கிலும் சந்தைப் படுத்த வேண்டிய காரணத்திற்காக அங்கு ஏற்கெனவே புகழ்பெற்றிருக்கும் ஐந்து நடிகைகளில் ஒருவரைத்தான் தேர்வு செய்கிற நெருக்கடி இயக்குநருக்கு ஏற்படுகிறது. அதைப் போலவே இத்திரைப்படத்தின் அரசியல்தன்மையையும் சாதி குறித்த பின்னணிகளையும் துல்லியமாக்கினால் அது குறித்த சிக்கல்களையும் தடைகளையும் இத்திரைப்படம் சந்திக்கக்கூடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருக்கலாம். இத்தனை பிரச்சினைகளையும் மீறித்தான் ஒரு சுமாரான திரைப்படமாவது தமிழ் சூழலில் வெளிவரக்கூடிய அவலமான நிலை நிகழ்கிறது. திரைத்துறை படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்க வேண்டுமெனில் பார்வையாளர்களின் ரசனை முதிர்ச்சியடைந்து நல்ல முயற்சிகளை மாத்திரமே ஆதரிக்கும் சூழல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இடைநிலை திரைப்படங்கள் நகர்ந்து இயக்குநர்கள் தாம் உருவாக்க விரும்புகிற கலை சார்ந்த திரைப்படங்களுக்கு அவை இட்டுச் செல்லும்.

***

மெட்ராஸ் திரைப்படத்தைப் போன்று சமீபத்தில் விமர்சகர்களின்  கவனத்திற்கு உள்ளான வேறெந்த திரைப்படமும் இருப்பதாகத் தெரியவில்லை. 'சேது' திரைப்படத்தில் 'சீயான்' என்கிற வார்த்தைக்கு ஆளாளுக்கு அர்த்தம் தேடுபவர்களைப் போலவே இது வழக்கமான தமிழ் திரைப்படமா அல்லது ஒரு நல்ல முயற்சியா என்றும் இது தலித் சமூக எழுச்சி சார்ந்த சினிமாவா அல்லது அதற்கான தெளிவில்லாமல் அடித்தட்டு மக்களை மாத்திரம் சித்தரிக்கிற சினிமாவா என்று ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இத்திரைப்படம் பெற்று வரும் கவனமும் பாராட்டும் ஒரு சாராரை பதட்டப்பட வைக்கிறது என்பது மாத்திரம் தெளிவு.

பிராமணர்கள் ஆதிக்கம் செய்த சினிமாவை இடைநிலை சாதி இயக்குநர்கள் கைப்பற்றி அதற்குரிய போற்றிப்பாடுதல்களுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த சூழலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கூறுகளை முன்வைக்கும் சினிமாக்கள் நுழைவதை ஆதிக்கசாதி உணர்வுள்ளவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.  இதில் நுட்பமாக வெளிப்பட்டிருக்கும் தலித் அடையாளங்களைத் துடைத்து விட்டு சாதி அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உள்ளீடற்றதொரு படைப்பாக இதை முன்வைப்பதற்காக சொல்லப்படும் காரணங்களும் விமர்சனங்களும்  நகைப்பை ஏற்படுத்துகின்றன. இத்திரைப்படம், உருவாகிக் கொண்டிருக்கும் இன்னொரு தமிழ் திரைப்படத்தின் நகல் என்று நிறுவ முயற்சிக்கும் தீர்ப்புகள் அவசரம் அவசரமாக எழுதப்படுகின்றன. 'மாட்டுக்கறி உண்பதைப் பற்றி' புனைவுகளில் எழுதப்படும்  வரிகள்  கூட வெகுஜன ஊடகங்களில் மறுக்கப்பட்டு மாற்றி எழுதப்படும்  நவீன தீண்டாமை கொண்ட சூழலே நிலவுகிறது. உத்தப்புர சுவர் மாத்திரமல்ல, ஆதிக்க மனங்களிலுள்ள தீண்டாமை சுவர்களும் அகற்றப்பட வேண்டியதே.

'அடங்குடா' என்று இத்திரைப்படத்தில் ஓர் இளைஞன் ஆதிக்கசாதி நபரால் அதட்டப்படும் போது 'அடங்கறதெல்லாம் அந்தக்காலம்' என்று அந்த இளைஞன் ஆவேசத்துடன் பதிலுரைப்பதைப் போன்று தொடர்ந்த போராட்டங்களின் மூலம் மேலெழுந்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் படைப்புலகில் 'தலித் இலக்கியம்' என்றொரு வகைமை தனக்கான அடையாளத்தையும் கவனத்தைப் பெற்றது போன்ற திரைத்துறையிலும் 'தலித் சினி்மா' என்றொரு வகைமை உருவாகும் என்கிற நம்பிக்கைக்கான துவக்கத்தை தந்திருக்கிறது 'மெட்ராஸ். இதை சாத்தியப்படுத்திய இரஞ்சித்திற்குப் பாராட்டுக்கள். 

- உயிர்மை - நவம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)


suresh kannan

1 comment:

geethappriyan said...

நான் இப்போது தான் படித்தேன்,மிக அருமையாக படத்தின் நுணுக்கமான காட்சிகளை சுட்டிக்காட்ட்சி அலசியுள்ளீர்கள்.காதரின் தெரசாவின் நடிப்பு உடல்மொழி சமகால மாநகரின் நவீன நங்கையர்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது,தலித்களில் நல்ல நிறமுள்ளவர்களை நான் பார்த்திருக்கிறேன்.அதை நிரூபிப்பதற்காக ரஞ்சித் கலையரசியின் அம்மாவையும் நல்ல சிவப்பான பெண்மணியாக காட்டியிருந்தார்.மாரியைப் போன்றே உலாவரும் வட்டம் மாவட்டங்களை நாம் பார்த்திருப்போம்,ஒவ்வொரு கதாபாத்திரமும் ,நம்முள் அக்கம்பக்கத்தவர் போல பதிந்தது தான் படத்தின் பலம்.தவிர எல்லா ஃப்ரேம்களிலுமே நாம் காண்பது இயல்பான சூழல் தான்,உதாரணத்துக்கு காளியின் வீடு ஒரு LIG ஒரு படுக்கை அறை வீடு,காளியின் அப்பா ஹாலின் சோஃபாவிலேயே தூங்கி எழுவதை நாம் பார்ப்போம்,ஆர்ட் டைரக்‌ஷன் கூட கதையின் போக்கில் சரியான படிக்கு இயங்கியிருப்பதற்கு அக்காட்சி ஒரு சான்று.