Saturday, July 12, 2014

Saivam - Tamil - சைவத்தின் அரசியல்



சைவம் திரைப்படத்தின் ஒன்லைனை இப்படியாக சொல்லலாம் - "ஒரு புறாவிற்கு இத்தனை அக்கப்போரா?"

இயக்குநர் விஜய் தம்முடைய முந்தைய திரைப்படங்களை வேறு அந்நிய பிரதேச திரைப்படங்களிலிருந்து மோசமாக நகலெடுத்து விமர்சகர்களால் திட்டித் தீர்க்கப்பட்டவர். இம்முறை தன்னுடைய அம்மா சைவத்திற்கு மாறினதற்கு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு 'உண்மையான' நிகழ்வை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க முன்வந்ததிற்கு மகிழ்ச்சி. ஆனால் இத்திரைப்படத்தின் மூலம் அவர் என்ன செய்தியை சொல்ல வருகிறார் என்பது அழுத்தமாக வெளிப்படவில்லை. படத்தின் தலைப்பை வைத்தும் பிரச்சாரத் தொனியின்றி மிதமாக இறுதிக் காட்சியின் மூலம் இயக்குநர் சொல்ல வருதைப் பார்த்தும் 'உயிர்க்கொலை வேண்டாம், சைவத்திற்கு மாறிவிடுங்கள்' என்பதுதான் இயக்குநர் சொல்ல வருவது என்றால்  நன்றாக வறுக்கப்பட்டு பார்த்தவுடன் உண்ண நாவூறும்படி ஒரு தேர்ந்த உணவு புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட ஒரேயொரு புகைப்படத்தின் வெற்றியைக் கூட இத்திரைப்படத்தினால் அடையமுடியவில்லை என்பதுதான் பொருள். 'கோயில்களில் உயிர்ப்பலி கூடாது' என்று அதிமுக அரசு முன்பொரு அரசு உத்தரவைக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தோல்வியடைந்ததை நினைவுகூர்ந்தால், அதற்கு ஆதரவான ஒரு படைப்பை உருவாக்கி அதிகாரத்தின் கனிவைப் பெறுவதுதான் இயக்குநரின் நோக்கமா என்பதும் தெளிவில்லை.

சைவத்திற்கு மாற வலியுறுத்தும் ஆதாரச் செய்தியாக இத்திரைப்படத்தை ஒற்றைத்தன்மையில் அணுகினாலும் காட்சிகளின் ஊடே பல  மூடத்தனமான பிற்போக்குத்தனங்களை மிக தன்னிச்சையாக இத்திரைப்படம் சொல்லிச் செல்வதுதான் இதன் மிகப் பெரிய ஆபத்தே.

சமையலறையும் அது தொடபான விஷயங்களும்தான் பெண்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட குறைந்தபட்ச எல்லை  என்று நாம் நம்பிக் கொண்டிருந்தாலும் அதுவும் ஆண்களுக்கு உட்பட்டதே என்பதை இத்திரைப்படம் நிறுவ முயல்கிறது. படத்தின் துவக்க காட்சியொன்றில் சந்தைக்குச் செல்லும் இல்லத்தரசி அங்கு எதை வாங்குவது என்று குழம்பி அதைக் கூட தீர்மானிக்க இயலாமல் வீட்டுக்காரருக்கு 'ஒரு போனைப் போடு' என்கிறாள். பொருளீட்டுவதன் மூலம் தன் அதிகாரத்தின் வலிமையை சமையல் அறையிலும் கூட மறைமுகவாவேனும் ஆண்கள் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்றால் அந்த வீட்டில் வளரும் சேவலுக்கு இருக்கும் மூளையும் தன்னிச்சையான சுதந்திரமும் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறதா? உண்மையில் வீடுகளில் 'ஆண்கள்தான் சமைக்கிறார்கள்' என்பது மாதிரி பெரும்பாலும் ஆண்களாலேயே எழுதப்படும்  நகைச்சுவைத் துணுக்குகள் அவர்களின் குற்றவுணர்வின் வடிகால்தானா?

இன்னொரு காட்சியில், நகரத்திலிருந்து வரும் சிறுவனுக்கு ஈடாக கிராமத்துப் பள்ளியில் வாசிக்கும் சிறுமி  சரிக்கு சரியாக ஆங்கிலத்தில் சண்டையிடுகிறாள். 'படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்' என்று கிராமத்து சிறுமியின் தந்தை, நகரத்து சிறுவனின் தந்தையைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன் சொல்கிறார். ஒருவர் முறையாக கல்வி கற்றிருப்பதின் அடையாளம் என்றால் அது ஆங்கிலத்தில் உரையாடுவதுதான் என்பது மாதிரியான, ரிக்ஷாக்காரராக இருக்கும் எம்.ஜி.ஆர் ஒரு அசந்தர்ப்பமான காட்சியில் திடீரென சடசடவென ஆங்கிலத்தில் உரையாடி பார்வையாளர்களை அதிர்ச்சியும் பிரமிப்பும் அடையச் செய்யும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து இன்னமும் தமிழ்சினிமா பழமைவாதத்திலிருந்து வெளிவரவில்லை என்பதை அறிய அப்படியொன்றும் ஆச்சரியமாக இல்லை.

நெருங்கிய உறவினர்களிடையே செய்யும் திருமணங்களால் உடற்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதை அறிவியல் மருத்துவம் மறுபடி மறுபடி எச்சரித்துக் கொண்டிருந்தாலும் "முறைப் பொண்ணை லவ்வடிச்சா என்னடே தப்பு?" என்கிற செய்தியையும் அதுவும் ஒரு சிறுமியின் மூலமாக இத்திரைப்படம் சொல்லிச் செல்கிறது. ஈட்டப்படும் சொத்துக்கள் நெருங்கிய உறவினர்களிடையேதான் புழங்க வேண்டும், அது வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக சுயநல நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கும் பழைய ஏற்பாடுகளில் உள்ள ஆபத்தை இத்திரைப்படம் ஞாபகமாக மறந்து விலகி அதிலுள்ள ரொமாண்டிசத்தை மாத்திரம் பேசுகிறது.

இன்றும் கிராமங்களில் விவசாயம் தொடர்வது வேறுவழியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்த தொழிலாக, பாரம்பரியமான தன்னிச்சையான நிகழ்வே. மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் செய்யப்படும் ஆபத்தான விளையாட்டுக்களை போல விவசாயமும் இன்று ஒரு தற்கொலை முயற்சியாக மாறிவிட்டதற்கு நீர்பகிர்வு அரசியல் துவங்கி அதிகாரமும் வேலைவாய்ப்பும் நகர்ப்புறங்களில் மாத்திரம் குவிக்கப்பட்டு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தராப்படாதுதான். விளைநிலங்களை வீடு கட்டுவதற்கான நிலமாக மாற்றப்படுவதுதான் புத்திசாலித்தனமான பிழைக்கத் தெரிந்த வழியாக மாறிவிட்ட பிறகு, இத்திரைப்படத்தின் குடும்பத்தலைவர் சொல்வது போல "நாம விவசாயம் செய்யலைன்னா அரிசி எப்படிப்பா கிடைக்கும்" என்னும் சமூகப் பொறுப்பின் பெருந்தன்மையோடு யோசிக்கும்  விவசாயப் பணக்காரர்கள் யதார்த்தத்தில் ஒன்றிரண்டு பேர்களாவது மிஞ்சுவார்களா என்று தெரியவில்லை. வெறுமனே லட்சியவாதக் குரல்களை மாத்திரம் பின்னுறுத்தி அதன் பின்னேயுள்ள அரசியல் குறித்து மெளனம் சாதிப்பது படைப்பாளிகளுக்கு அழகல்ல.

சிறுதெய்வ வழிபாடுகளின் ஒருபகுதியாக உள்ள உயிர்ப்பலியின் பின்னுள்ள மூடத்தனத்தை மிதமாக விமர்சிக்கும்  இத்திரைப்படம் பெருந்தெய்வ வழிபாடுகளில் உள்ள மூடத்தனங்களைப் பற்றி ஏதும் பேசாமல் மெளனமாகவே நகர்கிறது.

இப்படியாக திரைப்படத்தினுள் உறைந்திருக்கும் பழமைவாத அரசியல்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் கூட இத்திரைப்படம் வருஷம் 16, பாண்டவர் பூமி, அழகர்சாமியின் குதிரை ஆகிய திரைப்படங்களை நினைவுப்படுத்தும் வகையிலும் தொலைக்காட்சித் தொடர்களை நினைவுப்படுத்தும் வகையிலும் நாடகத்தன்மையோடும் மிகையுணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டதொன்றாக இருக்கிறது. காட்சியில் வெளிப்படும் ஒரு அதிர்ச்சியான தகவலுக்கு அந்த பிரேமில் உள்ள அத்தனை பாத்திரங்களுக்கும் ஒரு ரியாக்ஷன் ஷாட் வைத்திருப்பதை படம் பூராவும் தொடர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஓர் இரானிய திரைப்படத்தின் எளிமையோடும் அழகியலோடும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி விடவேண்டுமென்கிற இயக்குநரின் நோக்கத்தை யூகிக்க முடிகிறதென்றாலும் தட்டையாக உருவாக்கத்தினால் அது நிறைவேறவில்லை. சிறுமிக்கும் சேவலுக்குமான நேசமும் பிணைப்பும் இயல்பான காட்சிகளின்  மூலம் முறையாக முன்பே நிறுவப்படாததால் அது குறித்து பின்னால் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு எவ்வித அனுதாக சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக சேவலை தேடுகிறேன் என்று இவர்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல் "எப்பா.. அந்த சனியன் பிடிச்ச சேவ எப்ப கிடைக்கும்.. இவங்க எப்ப பலி கொடுத்து பொங்க வைத்து படத்தை முடித்து நம்மை விடுவிப்பார்களோ. என்கிற சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஓயாமல் கத்தி அலைந்து கொண்டிருக்கும் ஒரு பறவையினம், இத்திரைப்படத்தினுள் மாத்திரம் எப்படி ஒரு சாதுர்யமான திருடன் மாதிரி வீட்டு மச்சினுள் அமைதியாக ஒளிந்திருக்கும் என்பது போல உள்ளுக்குள் எழும் தர்க்க ரீதியான கேள்விகளை புறந்தள்ளாமல் இத்திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை.

இத்திரைப்படத்தின் பலங்களுள் ஒன்றாக இதன் casting ஐ சொல்லலாம். நாசரை விடுங்கள்.. யானைக்கு சோளப்பொறி. ஆனால் அவரது உறவுகளாக வரும் நபர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள். குறிப்பாக பணிப்பெண்ணாக வரும் நபர் ஓர் அசாத்தியமான தேர்வு. வெற்றிலையை இயல்பாக மென்று கொண்டே தோன்றும் முதல் காட்சியிலிருந்தே நம்மைக் கவர்ந்து விடுகிறார். போலவே மற்ற நபர்களும். முன்பு பேபி ஷாலினி என்கிற குழந்தை நட்சத்திரத்தை வைத்து மிகையான முகபாவங்களையும் செய்கைகளையும் செய்ய வைத்து நம்மைக் கொன்று கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இந்த இயக்குநரே முன்பு அது போன்று தெய்வத் திருமகளை உருவாக்கியிருக்கிறார். ஆனால் சிறுமி சாராவை இதில் அப்படியெல்லாம் பெரிதாக செய்ய விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஓர் ஆறுதலான சமாச்சாரம். உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருக்கும் ஓர் அருமையான பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தானே என்ற கேள்வியை எழுப்புகிறது.

மற்றபடி ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை எவ்வித தர்க்கப் பிழைகளும் மனச்சாட்சி தொந்தரவும் அற்று ரசிக்க விரும்பினால் இத்திரைப்படம் அதற்கு ஏற்றவாறான சுவாரசியமான திரைக்கதையைக் கொண்ட ஒரு வெகுசன படைப்பே.

()

சைவம் x அசைவம் என்பது அரதப்பழசான விவாதம் என்றாலும் கூட என் தனிப்பட்ட மனப்பதிவுகளை வைத்து பார்க்கும் போது நான் அசைவம் உண்ணும் வழக்கம் உள்ளவன் என்றாலும் என்னுடைய தராசு சைவத்தின் பக்கமே சாயும். 'கீரையைப் பறிக்கிறோமே, அது உயிர் இல்லையா?" என்று....அசைவம் உண்ணுவதை எந்த அபத்தமான தர்க்கமும் கொண்டு நான் நியாயப்படுத்த முயலமாட்டேன். பல முறை இதைக் கைவிட முயன்றாலும் இயலவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. இந்த வழக்கம் நாம் பிறந்து வளரும் சூழலால் நம் மீது திணிக்கப்படுவதேயன்றி நாம் தேர்வு செய்வதல்ல. இந்த வழக்கம் காரணமாக ஒருவரை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ பார்ப்பது எனக்கு உவப்பில்லாத செயல். அசைவம் உண்ணுபவர்களை ஏதோ பாவம் செய்பவர்களாக சித்தரித்து அவர்களை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதும் ஒப்புக் கொள்ளக்கூடியதல்ல. சனாதன மனங்கள் இயங்கும் மத அரசியல் கொண்டு இதை அணுகுவது ஆபத்தானது.

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கானது. அவை அவைகளின் இயற்கை விதிகளுக்கேற்ப சுதந்திரமாக புழங்குவதுதான் நியாயமானது. ஆனால் மனித இனம் தனது சிந்திக்கும் அறிவைக் கொண்டு இயற்கையையும் பெரும்பாலான உயிரினங்களையும் அழித்து வளர்வது எனக்கு ஏற்புடையதில்லை. தாவரங்கள் அதிகம் வளர முடியாத வேறு வழியில்லாத சூழலில் பறவைகளை, விலங்குகளை உணவுக்காக கொல்வதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வேறு வகையான உணவு வாய்ப்புகள் இருக்கும் சூழலிலும் சக உயிர்களைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டியதே என்பது என் நிலைப்பாடு.  ஒரு ஆப்பிள் அல்லது ஒரு கோழிக்கால் துண்டு இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் உண்டு உயிர்வாழ முடியும் என்றொரு நிராகரிக்க முடியாத வாய்ப்பு என் முன் வைக்கப்படுமாயின் நான் ஆப்பிளைத்தான் தேர்வு செய்வேன். ஜீவிப்பதற்காக குறைந்த பாவத்தை தேர்வு செய்வதுதான் குறைந்தபட்ச நியாயமாகவாவது இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

நிற்க.. இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது போலவே எங்கள் வீட்டிலும் ஒரு கோழி வளர்ந்து இளவயது சகோதரர்களான நாங்கள் அதன் மீது தன்னிச்சையாக பாசம் கொண்ட ஒரு சிறுவயதுக் கதையொன்று உண்டு. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். 

suresh kannan

1 comment:

viki said...

ஒரு ஆப்பிள் அல்லது ஒரு கோழிக்கால் துண்டு இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் உண்டு உயிர்வாழ முடியும் என்றொரு நிராகரிக்க முடியாத வாய்ப்பு என் முன் வைக்கப்படுமாயின் நான் ஆப்பிளைத்தான் தேர்வு செய்வேன். ஜீவிப்பதற்காக குறைந்த பாவத்தை தேர்வு செய்வதுதான் குறைந்தபட்ச நியாயமாகவாவது இருக்க முடியும் என்று நம்புகிறேன்.<<<<<<<<<<<<<<<
.
.
இந்தப்பதிவின் மொத்த சாரமாக இதை குறிப்பிடலாம்.அற்புதம்.
பொதுவாகவே சைவத்தை யாரேனும் வலியுறுத்தினால் உடனே பார்ப்பன சதி என்று ஆரம்பிக்கும் திராவிட மாயையில் நீங்கள் சிக்கி கொள்ளாதது மகிழ்ச்சி அளிக்கிறது.
திருக்குறள் கூட புலால் உண்ணாமை பற்றி சொல்கிறது.வள்ளலார் அதையே சொன்னார்.பவுத்தம் அதை சொன்னது.சமணம் சொன்னது.கிம் கி டுக் இயக்கிய spring summer fall winter and spring படத்தில் விலங்குகளை துன்புறுத்தும் சிஷ்யனை அதே போல தண்டனை கொடுக்கும் குரு சொல்வதும் இதைத்தான்.அந்தக்காலத்தில் அசைவம் நல்லது என்று சொன்னார்கள் என்றால் அப்போது கடுமையான உடல் உழைப்பில் மட்டுமே மக்கள் வாழ்ந்தனர்(சில விதிவிலக்குகள் உண்டு).ஆக மாமிசம் சாப்பிட்டுவிட்டு நாள் முழுக்க வெயிலில் உழைத்தால் அதற்கான கொழுப்பின் தேவையை மாமிசம் பூர்த்தி செய்யும்.ஆனால் இன்று?மாமிசம் தின்றுவிட்டு கணினி முன்போ டிவி முன்போ நாள் முழுக்க உட்காரும் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.தவிர ஒரு கிலோ அரிசி உண்டாக்க தேவையான தண்ணீரை விட பல மடங்கு நீர் ஒரு கிலோ மாமிசம் உண்டாக்க தேவை.க்ளோபல் வார்மிங் எல் நினோ என்று உலகமே வறுமையை நோக்கி செல்லும் வேளையில் we cant afford this luxury என்பதே என் கருத்து.கவனிக்க இது என் கருத்து மட்டுமே.மேலும் நானே ஒரு மாமிச பட்சினியாக இருந்து மாறியவன் என்பதால் இங்கே கமன்ட் செய்ய தகுதி உண்டென்று கருத்துகிறேன்.நன்றி.