Friday, July 11, 2014

Lucky Star - Malayalam - தத்துக் குழந்தையும் முத்தான திரைக்கதையும்



மருத்துவ விடுமுறை காரணமாக, திட்டமிடாமல் random  ஆக தேர்வு செய்து சில திரைப்படங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி சில வரிகள் எழுத உத்தேசம்.

சமீப காலமாகத்தான் மலையாள சினிமாக்களை நிறைய கவனித்து வருகிறேன். அழுது வடிந்து காடா விளக்கில் சாவகாசமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கலை சார்நத படங்கள் ஒருபுறமும் ஜாக்கெட்டை A முத்திரையோடு கழற்றிக் கொண்டிருந்த மித பாலியல் தன்மையுடன் கூடிய படங்கள் இன்னொரு புறமாக இருந்த மலையாள சினிமாக்களின் முகம் மாறி நீண்ட வருடங்களாகி விட்டது போலிருக்கிறது. அவை தமிழ் சினிமைக்களின் வணிக வெற்றியை பார்த்து நகலெடுத்து சேட்டன்மார்களும் இப்போது எடோ....என்று பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டதாய் சொல்கிறார்கள். ஏதோ ஒரு ஸ்டில்லில் லாலேட்டன் வேட்டியை அபாயகரமான கோணத்தில் தூக்கிக் கட்டி யாருக்கோ சவால் விடும் போஸில் நிற்பதைக் காண சற்று பயமாய்த்தான் இருந்தது. என்றாலும் மலையாள சினிமை அத்தனை சீக்கிரம் தமிழ் போல் அழிந்து விடாது என்பதை புதிய அலை சினிமாக்கள் பறைசாற்றி வருகின்றன.

சமீபத்தில் பார்த்தது 'லக்கி ஸ்டார்' எனும் சித்திரம். வாடகைத் தாய், தத்துக் குழந்தையினால் ஏற்படும் சிக்கல்கள், மனநெருக்கடிகள், சென்டிமென்டுகள் என்று... தமிழில் 1980-களிலேயே வந்து விட்ட 'அவன் அவள் அது' போன்று அதே அரதப் பழசான டெம்ப்ளேட் கதையைக் கொண்டிருந்த 'சினிமாத்தனமான' திரைப்படம் என்றாலும் மையத்திலிருந்து விலகாத சுவாரசியமான நேர்க்கோட்டு திரைக்கதையினால் படம் பார்க்கும் முழுமையை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். என்னதான் நாம் மெல்லுணர்ச்சிகளை சமயங்களில் கிண்டலடித்தாலும் ஆழ்மனதில் அவற்றின் அடிமைகள் என்பதால் இது போன்ற திரைப்படங்கள் நம்மைக் கவர்ந்து விடுவதை தவிர்த்து விட முடியவில்லை. இந்த வகைமையில் பாசிலின் 'என் பொம்முக் குட்டி அம்மாவிற்கு' எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு திரைப்படம்.

இத்திரைப்படத்தில் சில இழுவைக் காட்சிகள் உண்டென்றாலும் நகைச்சுவையையும் சென்ட்டிமென்ட்டையும் உறுத்தாமல் எப்படி கலப்பது என்பதற்கு இதன் திரைக்கதை சிறந்த உதாரணம். சமீபத்திய மலையாள சினிமைக்களின் ஒளிப்பதிவு அபாரமான அழகுணர்ச்சியுடன் அமைந்திருப்பதை கவனிக்கிறேன். இதுவும் அப்படியே.

ஒரு சாமானிய நாயகனின் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் ஜெயராம். இவர் ஏன் தமிழ் சினிமாக்களில் (குறிப்பாக கமல் படங்களில்) வந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் போல அவமானப்படுத்தப்பட்டு சீரழிகிறார் என்று தெரியவில்லை. அங்கே அத்தனை சில்லறை பெயராதோ என்னவோ.. லாலேட்டனே விஜய் படத்திற்கு வந்து அழியும் போது ஜெயராம் எம்மாத்திரம்? நாயகியாக ரச்சனா என்னும் தொலைக்காட்சி புகழ் நடித்திருக்கிறார். இயற்கை வளம், அழகான பெண்கள் என்று...(இரண்டையும் இணைத்துப் படிக்காதீர்கள்) நிறைய நல்ல விஷயங்களை கேரள தேசத்திற்கு மாத்திரம் ஸ்பெஷலாய் கொட்டியிருக்கும் இயற்கையை திட்டவே தோன்றுகிறது.

மலையாளிகள் தமிழர்களை தம்முடைய படங்களில் கேவலமாய்த்தான் சித்தரிப்பார்கள் என்று யோசிப்பவர்களுக்கு வாகாக சில காட்சிகள் உள்ளன. கதை பூராவும் சென்னையில் நிகழ்வதான திரைக்கதை என்றாலும் சென்னையைப் பார்க்க முடியாதது ஒன்றும் பெரிய குறையில்லை. தமிழ் படங்களிலேயே அப்படித்தான் எனும் போது இது பெரிய விஷயமில்லை. ரஜினியை கிண்டலடித்து வரும் ஒரு வசனத்தை யாரும் தவற விட்டு விடக்கூடாது என்பதே என் கவலை.

சென்டிமென்ட் என்பதற்காக ரொம்பவும் அழுது வடியவும் இல்லை. சில காட்சிகளில் லேசான அதிர்ச்சி தந்து சிரிக்கவும் வைக்கிறார்கள்..அமெரிக்க தம்பதியினருக்காக வாடகைத் தாயாக இருக்கும் நாயகி, குழந்தை பிறந்து அதை ஜெயராம் எடுத்துச் செல்லும் போது 'ஒரு நிமிடம்' என்று தடுக்கிறார்.. குழந்தையை கடைசியாக பார்க்க விரும்பி ஓர் அழுகாச்சி சீன் போல எனும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே 'மீதிப் பணத்தை சரியா செக் பண்ணி வாங்கிட்டு வந்திடுங்க' என்று ரச்சனா குறும்பான முகபாவத்துடன் சொல்லும் போது என்னென்னவோ தோன்றுகிறது. அறிமுக இயக்குநர் தீபன் அந்திக்காடுக்கு பாராட்டுக்கள்.

வாரஇறுதியில் குடும்பத்துடன் கண்டு களித்து நெகிழ்ந்து மகிழ ஓர் அருமையான குடும்பச் சித்திரம்.


suresh kannan

2 comments:

ஆர்வா said...

நான் எப்பவோ பார்த்துட்டேன்.. ரொம்ப சூப்பரா இருக்கும்.. முதல் காட்சியில் ரோட்டுக்கடையில் காய்கறி வாங்கி அதை ரிலையன்ஸ் கவரில் வைத்துக்கொண்டு ஹீரோயின் கொடுக்கும் எண்ட்ரியில் கலக்க ஆரம்பிக்கும் படம், இறுதிவரை செம சூப்பராக போகும்.. இந்தப்படத்தை தமிழில் செய்தால் என்னைப்பொறுத்த வரை அந்த டாக்டர் கேரக்டருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி மட்டும்தான் செம சாய்ஸ்.. ஹி.ஹி.. ரணகளமா இருக்கும் இல்ல...

ரிஷி said...

"வாடகைத்தாய்"- இந்த கருவில் லோகிததாஸ் எழுதி சிபிமலயில் இயக்கிய லாலேட்டேன் நடித்த "தசரதம்" பார்த்திருக்கிறீர்களா? youtubeல் இருக்கு...செண்டிமெண்ட்டை அளவோடு கொடுத்தால் இனிக்கும் தானே?!