Tuesday, December 11, 2012

உலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு நன்றி



ஏழு நாட்கள். உலக சினிமாவின் ஏழு சிறந்த கலையாளுமைகள். தினமும் சுமார் இரண்டரை மணி நேர உரை. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள், ஆர்வமுள்ள சினிமா ஆர்வலர்கள்.பெரும்பாலும் இளைஞர்கள். முதியவர்கள். ஒன்றிரண்டு பெண்கள். உயிர்மை பதிப்பகம் ஒழுங்கு செய்திருந்த உலக சினிமா பேருரையில் கலந்து கொண்ட அனைவரும் உரை நிறையும் வரையில் அமைதியாகவும் ஆர்வமாகவும் ரசித்தார்கள். (அரங்கு நிறைந்து நின்று கொண்டே நிகழ்வை கேட்டவர்களும் இதில் அடக்கம்).

சினிமா ரசனை என்பதை கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா இடைவிடாது தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு சமூகத்தில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது யதார்த்த உண்மை என்றால் நம் சமூகத்தில் அரசியல் தலைவர்களை சினிமாதான் தீர்மானிக்கிறது என்பது கசப்பான உண்மை. நம்மை ஆள்பவர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சினிமா இங்கு வலிமையான ஊடகமாக திகழ்கிறது. அத்தகையான வலிமையான ஊடகம் எத்தனை மோசமாக அழுகிக் கிடக்கிறது என்பதை சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இருந்தும் வெகுஜன ரசனை இன்னமும் துப்பாக்கி, மாற்றான் போன்ற அரைவேக்காட்டு குப்பைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறது. இந்த ரசனை மாறினால் சமூக மாற்றத்தில் சினிமாவும் பங்கும் மகத்தானதாக இருக்கும்.

பாலுமகேந்திரா குறிப்பிடுவது பள்ளி மாணவப்பருவத்திலேயே சினிமா ரசனையை உயர்த்துவதற்கான ஆலோசனை. ஆனால் வளர்ந்தவர்களுக்கு?...

சினிமா இயக்கங்களும், அமைப்புகளும், சினிமா மீது ஆர்வம் கொண்ட தனிநபர் முயற்சிகளும், நல்ல சினிமாவைப் பற்றி தொடர்ந்து பேசும், எழுதும் படைப்பாளிகளின் பங்குதான் இங்கு முக்கியமானதாகிறது. எஸ்.ராவின் பேருரையும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.

நான் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டபடி ஓர் இயக்குநரைப் பற்றிய அறிமுகத்தை, அவரின் சிறந்த படங்களை, மிகச் சிறந்த காட்சிக் கோணங்களை தன் வாழ்வின் பல மணி நேரங்களை செலவழித்து அவதானித்ததை ரசனையோடு இரண்டரை நேரத்தில் நம்மோடு பகிர்வதென்பது சிறப்பான விஷயம். ஏற்கெனவே நமக்கு அறிமுகமான விஷயங்கள் என்றாலும் அதை ஒரு விமர்சகரின் பார்வையில் கேட்டு நம்முடைய அனுபவத்தோடு ஒப்பிட்டு அது ஒத்திருந்தால் நம்மை நாமே பாராட்டிக் கொண்டு அல்லது விமர்சகரின் கோணத்தில் காட்சியின் புதிய பரிமாணங்களை அறிவதென்பது போன்று பல விஷயங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக சத்யஜித்ரே -வின் ஜல்சாகர் (The Music Room) படத்தினைப் பற்றி எஸ்.ரா. விவரித்த விதம் அத்தனை அருமை. நொடித்துப் போன நிலையிலும் தன்னுடைய வறட்டுக் கெளரவத்தை, கம்பீரத்தை இழக்க விரும்பாத ஒரு ஜமீந்தாரைப் பற்றின திரைப்படம். சில வருடங்களுக்கு முன்பு பார்த்ததை மீண்டும் பார்க்க விரும்பும் ஓர் ஆவலை ஏற்படுத்தினது எஸ்.ராவின் விவரிப்பு. இவ்வாறு பல திரைப்படங்கள்.

பணிப்பளு காரணமாக என்னால் பெர்கமன், பெலினி, சாப்ளின் போன்றவர்களை தவற விட நேர்ந்தது ஒரு சோகம்.

துவக்க விழாவின் போது பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் போல சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் இவ்வாறான அறிமுகங்களும் ரசனை பரிமாற்றல்களும் நிகழ வேண்டியது அவசியம்.

சுவாரசியமான மற்றும் உபயோகமான அனுபவத்தை அளித்த எஸ்.ராவிற்கும் உயிர்மைக்கும் நன்றி.

suresh kannan

No comments: