Saturday, July 17, 2010

பிரிவின் துயரை ஆற்றுப்படுத்த..

புலம் பெயர்ந்தோ அல்லது தற்காலிக பிரிவிலோ, புது மனைவியை அல்லது காதலியை பிரிந்திருக்க வேண்டிய தனிமையில் கேட்கும் போது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய திரையிசைப்பாடல் எதுவென்று யோசித்தேன்.

தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ


ஆஹா!

தலைவனின் பிரிவை எண்ணி தலைவியும் அந்த முனையில் அவனும் உருகித் தவிக்கும் சங்ககாலத்தமிழ்ப் பாடலொன்றை காட்சி்ப்படுத்த வேண்டும் என்று மணிரத்னத்திற்கு தோன்றியிருக்க வேண்டும். தளபதி'யில் அதற்கு  மிகப் பொருத்தமான சூழல் இல்லையெனினும் எப்படியோ இதைப் பொருத்தி விட்டார். 'அலைபாயுதே'வில் மாதவன் ஷாலினியைத் தேடி கேரளாவிற்கு ஓடும் அளவிற்கு (எவனோ ஒருவன் வாசிக்கிறான்) மிக யதார்த்தமான கதைப் போக்கு இதில் இல்லையெனினும் தனது காவிய விருப்பத்தை இதில் சாமர்த்தியமாக நுழைத்திருக்கிறார்.

போருக்குச் சென்றிருக்கும் தலைவனின் பிரிவை தலைவியும் களத்தில் நின்றிருக்கும் சூழ்நிலையிலும் சகியின் முகம் நினைவில் துன்புறுத்தும் வேதனையை அவனும் பாடுகிறார்கள். ரஜினி இதில் (நல்ல(?) ) ரவுடியாக கத்தியுடன் அலைவதால் ஒரளவிற்கு சூழல் பொருந்திப் போகிறது.

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்


எனக்கு அவ்வளவாக பிடிக்காத நடிகைகளில் ஷோபானாவும் ஒருவெரன்றாலும் கூட நடனம் பயின்றவர் என்ற முறையில் அவரது முகபாவங்கள் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும். சாமுராய் வேடத்தில் ரஜினியை பார்க்க சற்று காமெடியாக இருக்குமென்றாலும் தனது ஆண்மைத்தனமான தோற்றத்தினாலும் உடல்மொழியாலும் போர்ச்சூழலில் பொருந்தி நிற்பார்.
 


இளையராஜாவின் அற்புதமான உருவாக்கத்தில் இந்தப் பாடலும் ஒன்று. இதில் அவரது இசைக்கோர்ப்பின் பெரும் பலமே நமது ஆன்மாவை ஊடுருவிச் சென்று மனக்கொந்தளிப்பை ஆற்றுப்படுத்தி அமைதியடையச் செய்யும் மாயம்தான். மெலடியான இசையின் ஊடாக அதற்கு முரணான போர்ச்சூழலின் பரபரப்பான இசையை மிகப் பொருத்தமாக இணைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

காதினருகே ரகசியம் பேசும் மென்மையுடன் துவங்குகிறது இசையும் பாலு & ஜானகியின் குரலும். குறிப்பாக பாடல் முழுவதிலுமே பாலுவின் குரலில் பிரிவின் ஏக்கத்தையும் ஏங்கும் மென்மையையும் பசலையின் வேதனையையும் உணர முடியும். ஜானகியால் ஏறக்குறைய அவரைத் துரத்தித்தான் பிடிக்க வேண்டியிருந்திருக்கிறது. இசையின் மையச்சரடாக ஒலித்துக் கொண்டேயிருக்கும் குழலின் இசை நம்மை இன்பமாக தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன்பான போர்ச்சூழல் இசை முடிந்தபிறகு முணுமுணுப்பது போன்ற புல்லாங்குழலுக்காகவே இப்பாடலை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். இதற்கு மிகப்பொருத்தமாக மேகத்தின் பின்னே மறைந்து மறைந்து பயணிக்கும் நிலவின் ஷாட்டை மணி போட்டிருப்பார்.

எதிர்பாலினரின் புகைப்படத்தை இந்தப் பாடலின் பின்னணியில் வெறித்துக் கொண்டிருந்த தருணங்களை திருமணமாகி பல வருடங்கள் கழித்து நினைக்கும் போது காமெடியாக இருந்தாலும் அதிலுமோர் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. :)

 suresh kannan

8 comments:

Kaarthik said...

வழக்கம் போல் அருமையான பதிவு. குரோசோவாவின் Seven Samurai தான் இப்பாடலுக்கு Inspiration

Jey said...

உஙகளோட எழுத்து நடை நன்றாக உள்ளது.

சரவணகுமரன் said...

//சாமுராய் வேடத்தில் ரஜினியை பார்க்க சற்று காமெடியாக இருக்குமென்றாலும் //

அதானே, ரஜினியை வாராமல் இருக்க முடியாதே! :-))

Prathap Kumar S. said...

அருமையான பாடல்....

அந்த பாடலுக்கு முன் ரஜினி ஷோபனா இருவருக்கும் இடையே நடக்கும் வரும் வசனம்தான் அந்தப்பாடலை ரஜினி சாமுராயாக வைத்து அந்தப்பாடலை படமாக்க காரணம் என்று நினைக்கிறேன்....

கோபிநாத் said...

கலக்கல் தல ;)) ஆமா நாளைய இயக்குனர்..என்ன ஆச்சு?

ராம்ஜி_யாஹூ said...

இது நம்ம ஆளு தந்த inspiration மற்றும் கோடம்பாக்க செண்டிமெண்ட் என நினைக்கிறேன், அதனால் தான் மணி ரத்தினம் பர்ர்ப்பன் பெண் வேடம் என்றதும் ஷோபனாவை நடிக்க வைத்து விட்டார்.

பதிவு அருமை

Subbaraman said...

உண்மையிலேயே இது ஒரு அற்புதம். ராஜா ராஜா தான். இதற்கு பின்னணி அமைக்க பாம்பே-யில் நடந்த கதை தனி. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

ரங்கநாதன் said...

அதிலும் இளையராஜா, தன் படைப்பூக்கம் மெல்லத் தளர்ந்து, மடியிலிருந்து நழுவி எங்கோ உருண்டோடி மறைந்தபின் போட்ட பாட்டு இல்லையா இது சுரேஷ் கண்ணன்? அந்த விதத்திலும் இது நம் கவனிப்புக்குரிய பாடலாகிறது. திரைப்படங்களில் பாடல்களைப் பற்றிய நம் கருத்து வேறாக இருந்தாலும் கூட!