Saturday, November 08, 2008

இயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா?

டைம்ஸ் ஆ·ப் இந்தியா நாளிதழின் வெள்ளி இணைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு சிறந்த படங்களின் dvd-ஐ பரிந்துரைப்பார்கள். கூடவே ஏதாவதொரு பிரபலமும் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படியாக இந்தி திரைப்பட மதூர் பண்டார்கர் சென்ற வாரம் பகிர்ந்து கொண்ட குறிப்புகளில் காணப்பட்ட திரைப்படங்கள் (1) Midnight Express (2) Peter Sellers-ன் The Party. மதூர் எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர் என்பதால் அவர் பரிந்துரைத்த படங்களை தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தேன்.

(1) Midnight Express (1978)

Photobucket

இளைஞன் ஒருவன் பணத்திற்காக செய்யும் தவறொன்றினால் அந்நிய தேச சிறையில் கொடூரமான தண்டனையும் தனிமையையும் அனுபவிப்பதும் தன்னுடைய மனிதத்தை இழப்பதையும் இந்தப்படம் நுணுக்கமாக நம் முன் வைக்கிறது.

அமெரிக்கனான Billy Hayes போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது தீவிரவாதிகளின் தேடுதலுக்காக துருக்கி காவல்துறையினர் செயல்படும் போது விமானநிலையத்தில் பிடிபடுகிறான். (இந்தக் காட்சிகளில் பில்லிக்கு ஏற்படும் பதட்டத்தையும் பயத்தையும் பார்வையாளர்களுக்கும் ஏற்படுமாறு காட்சியமைத்திருப்பதும் அதற்கும் பின்னணி இசையாக இதயம் துடிக்கும் ஓசையை பயன்படுத்தியிருப்பது சுவாரசியம்). போதைப் பொருளை வைத்திருந்ததற்காக சுமார் 4 வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அங்கேயிருக்கும் மேற்கத்திய சிறைவாசிகளின் நட்பு கிடைக்கிறது. அவர்கள் துருக்கி மக்களின் அநாகரிகமான போக்கை கிண்டல் செய்கின்றனர். முதலில் மிகுந்த தனிமையை உணரும் பில்லி பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை ஓட்டுகிறான். என்றாலும் விடுதலையாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவனுடைய வழக்கு மீண்டும் அரசு தரப்பால் தோண்டியெடுக்கப்பட்டு சிறைத்தண்டனை 30 வருடங்களுக்கு நீடிக்கிறது. வெகுண்டெழும் பில்லி நீதிமன்றத்தில் துருக்கி மக்களை 'பன்றிகள்' எனத் திட்டுகிறான். சிறையினுள் தலைமை அதிகாரியால் நையப் புடைக்கப்படுகிறான். எல்லாச் சிறைகளையும் போலவே அங்கும் பணமிருந்தால் போதைப் பொருள் உட்பட எல்லா வசதியும் கிடைக்கிறது.

அவனுடைய சிறைத் தோழர்களுடன் அங்கிருந்து தப்பிப்பதற்காக திட்டமொன்று (சிறைவாசிகளின் சங்கேத மொழியில் Midnight Express) மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிகிறது. எப்போதும் காவல்துறையினரிடம் மற்றவர்களைப் பற்றி உளவு சொல்லி பாராட்டைப் பெறும் சமையல்காரன் இதையும் போட்டுக் கொடுத்து விடுவதில் பில்லியின் நண்பன் செமத்தியாக அடிவாங்கி உயிர்போகும் ஆபத்தை எதிர்கொள்கிறான். சமையல்காரனை சரியான இடத்தில் அடித்து பழிவாங்க நினைக்கும் பில்லி சிறைவாசிகளிடமிருந்து லஞ்சமாய்ப் பெற்று ஒளித்து வைத்திருக்கும் பணத்தை எரித்து விடுகிறான். சமையல்காரன் குய்யோ முய்யோவென்று அலறி அதிகாரியிடம் புகார் செய்கிறான். பணத்தை தேடி வரும் அதிகாரி பில்லியின் நண்பனை அழைத்துச் செல்ல கோபமுறும் பில்லி சமையல்காரனை நன்றாக அடித்து நாக்கைக் கடித்து துப்புகிறான்.

பின்பு மனநிலை பிறழ்ந்தவர்களுக்கான முகாமில் அடைக்கப்படும் பில்லி புத்தி பேதலித்துப் போய் கிடக்கிறான். வெளியில் உள்ள நண்பன் ஒருவனிடமிருந்து வந்த பணத்தை வைத்து காவல்அதிகாரியிடம் தன்னை மருத்துவமனைப் பிரிவில் சேர்க்கச் சொல்கிறான். பணத்தை வாங்கிக் கொள்ளும் அவன் பில்லியை தனியறைக்கு அழைத்துச் சென்று பளாரென்று அறைந்து அவனுடன் உறவு கொள்ள முயல்கிறான். பில்லி அவனை தள்ளவிட சுவற்றில் அறையப்பட்டிருக்கும் ஆணி தலையை தாக்கி அதிகாரி இறந்து போகிறான். பின்பு அதிகாரியின் சீருடையை அணிந்து பில்லி தப்பிப்பதோடு படம் நிறைவுறுகிறது.

()

Billy Hayes என்பவருக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து அவர் எழுதியிருக்கும் நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் திரைக்கதையை Oliver stone எழுத Alan Parker இயக்கியிருக்கிறார். Billy Hayes-ஆக Brad Davis மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளமலிருக்க அவரின் பரிதவிப்பும் சிறையின் தனிமையில் புலம்புவதும் தண்டனை நீட்டிக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் வெகுண்டெழுவதும் பின்பு புத்தி பேதலித்த நிலைக்கு மாறுவதும் .. என காட்சியின் தொடர்ச்சியாக அவரின் முக பாவங்களும் உடல் மொழியும் மிக அற்புதமாக மாறுகின்றன. படத்தின் பின்னணி இசையும் பல இடங்களில் மிக அற்புதமாக ஒத்துழைக்கிறது.

சிறையிலிருந்து தன் மகனை வெளியே கொண்டு வர நினைக்கும் பில்லியின் தந்தையும் அவரும் உரையாடும் இடங்களும் தன் மகனை வெளியே கொண்டு வர இயலாத தன் கையாலாகததனத்தை உணர்ந்து தந்தை வெடிக்கும் இடமும் மிக அற்புதமானவை. மனம் பேதலித்த நிலையில் இருக்கும் பில்லியை தனியறையில் காண வருகிறாள் அவனின் காதலி. அவளை கம்பிக்கு மறுபுறமடமிருந்து மேலாடையை கழற்றச் சொல்லி பில்லி சுயமைதுனம் செய்வதும் அதைக் கண்டு கதறியழும் காதலியின் சோகமுமான காட்சிகள் சற்று செயற்கையாக ஏற்படுத்தப் பட்டாற் போல தெரிந்தாலும் மனித மனம் எந்நிலையில் எவ்வாறு இயங்கும் என்பதை நாம் யூகிக்க முடியாமென்பதால் மிகைப்படுத்தப்பட்டது என்றும் சொல்ல இயலவில்லை.

சிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், பில்லி சமையல்காரனின் நாக்கை கடித்து துப்பி வெறி பிடித்தவன் போல் கூவுவது, பின்பு காட்டப் பெறும் மனநிலை பிறழ்ந்தவர்களின் காட்சிகள் போன்றவை முறையே இயக்குநர் பாலாவின் பிதாமகன், சேது ஆகியவைகளை நி னைவுப்படுத்துவது போல உள்ளது. இந்தப்படத்தினால் பாலா inspire ஆகியிருக்கலாம் என்பது என் யூகம்.

இந்தப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான அகாதமி விருது Oliver stone-க்கிற்கு கிடைத்தது. துருக்கி மக்களை இழிவுபடுத்தினாற் போல் அமைத்த காட்சிகளுக்காக பிற்பாடு அவர் துருக்கி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

()

Peter Sellers-ன் The Party என்கிற நகைச்சுவைப்படத்தைப் பற்றி அடுத்த பதிவில் எழுத முயல்கிறேன்.

suresh kannan

7 comments:

விலெகா said...

பாலா எவரையும் பார்த்து inspireஆகவேண்டியதில்லை.
அருமையான விமர்சனம்.

விலெகா said...

Me the First.

TBCD said...

விட்டால் குவாண்டாம் ஆப் சோலோசு இராமயணத்தின் பாதிப்பில் வந்தது என்பீர்களோ...(இரண்டுமே நாயகியயை இழந்த நாயகன் கதை...):))

PRABHU RAJADURAI said...

பிரேசில் சிறையான கரந்திருவில் நடைபெற்ற கலவரத்தைப் பற்றிய கரந்திருவைப் பார்க்க பரிந்துரைக்கிறேன்!

பாலா பார்த்திருக்கலாம்...ஏனெனில் அவரது நண்பர் அமீரின் பருத்தி வீரனின் கதாநாயகி சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில் மோதித்தானே சாகிறாள்...நாளை அவரிடமே கேட்டுச் சொல்கிறேன்.

சரவணகுமரன் said...

படத்தை பற்றிய உங்களது சுருக்கமான பார்வை அருமை.

ஆணி மேட்டர் பருத்திவீரனை நினைவுப்படுத்துகிறது.

Tech Shankar said...

அருமையான விமர்சனம். நன்றி

Senthil said...

me the firstu?

senthil