Monday, January 15, 2018

விட்டல் ராவ் நேர்காணல் - பேசும் புதிய சக்தி - ஜனவரி 2018 இதழ்


இந்த புத்தக கண்காட்சியில் ‘பேசும் புதிய சக்தி’ ஜனவரி 2018 இதழை எங்கு கண்டாலும் உடனே வாங்கி விடுங்கள். இயன்றால் அதற்கு சந்தாவும் கட்டி விடுங்கள். காரணமாகத்தான் சொல்கிறேன்.

ஜனவரி 2018 இதழில் எழுத்தாளர், ஓவியர் என்று பன்முகம் கொண்ட விட்டல்ராவின் அற்புதமான நேர்காணல் வெளியாகியுள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

விட்டல்ராவின் இளமைக்கால நினைவுகள், அகிலனுக்கு ஞானபீட விருது கிடைத்த அரசியல் அவலம், விருது மேடையில் கநாசு அகிலனை எதிர்கொண்ட விதம், காலவெளி நாவல், எழுதிய படைப்புகள், அன்னாகரீனா திரைப்படம் குறித்து அசோகமித்திரன் கொண்ட முரண், சிவாஜியின் ஓவர் ஆக்டிங், பானுமதி, உன்னத சினிமாவின் அடையாளம், பிடித்த எழுத்தாளர்களின் வரிசை, கையெழுத்துப் பிரதியாக உள்ள ‘நிலநடுக்கோடு’ நாவல் பற்றிய தகவல்கள் என்று பல சுவாரசியமான, உபயோகமான செய்திகள் இந்த நேர்காணலில் உள்ளன.

**

விட்டல்ராவ் ஓர் அற்புதமான எழுத்தாளர். சினிமா பற்றிய நூல்களையும் எழுதியள்ளார். ‘நவீன கன்னட சினிமா’, ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ போன்ற நூல்கள் மிக அரிதான பதிவுகளைத் தாங்கியவை. (இதையும் கண்காட்சியில் தேடி வாங்கி விடுங்கள்). தமிழக கோட்டைகளைப் பற்றி அவர் எழுதிய நூலொன்றின் பழைய பிரதி, திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் கிடைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

140 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 10 நாவல்கள், 8 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை அவர் எழுதியிருப்பதாக நேர்காணல் தெரிகிறது. அவரது வாழ்கை அனுபவங்களையொட்டிய, தமிழக அரசியல்வரலாறு ஊடுருவுகிற புதிய நாவல், சினிமாக்கட்டுரைகள் என்று இன்னமும் கூட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

பதிப்பாளர்களை நான் கும்பிட்டுக் கேட்கிறேன். இவரது படைப்புகள் அனைத்தும் மொத்தமாக தொகுத்து வெளியிடப்படுவது அவசியம்.

பெங்களூரில்தான் வசிக்கிறார். இயன்ற நண்பர்கள் தேடிச் சென்று உரையாடுங்கள். சினிமா, ஓவியம், இலக்கியம் பற்றிய தரவுகளின் அபூர்வமான சுரங்கம் இவர்.

**

இலக்கிய அரசியல்களின் அற்பத்தனங்கள் பற்றி இவர் எழுதிய நாவல் ஒன்றைப் பற்றி முன்னர் எழுதிய பதிவு இது. 

*தேரோடும் வீதி' என்றொரு நாவலை சில வருடங்களுக்கு முன் நீல.பத்மநாபன் எழுதினார். எழுத்துலக/பதிப்புலக அரசியல் குறித்து ஓர் எழுத்தாளரின் பார்வையில் எழுதப்பட்ட நீண்ட நாவல் அது. அந்த நூலை வம்பிலக்கியம், எழுத்தாளரின் வெற்றுப் புலம்பல், மன மாச்சரியங்கள், புறம்பேசுதலை செய்யும் நூல் என்றெல்லாம் தூற்றியவர்களும் உண்டு.

தொடர்புள்ளவர்களின் பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்படாமல் கிசுகிசு பாணியில் அந்த நாவல் எழுதப்பட்டிருந்தாலும் அம்மாதிரியான எழுத்துக்களும் தேவை என்றுதான் சொல்வேன். அவற்றை வெகுசன பத்திரிகைகளில் வாசகர்களை கிளுகிளுப்படைவதற்காக எழுதப்படும் சினிமா வம்புகளோடு, கிசுகிசுக்களோடு  ஒப்பிட முடியாது.

எல்லாத்துறைகளிலும் உள்ள அரசியலைப் போலவே எழுத்துலகிலும் நிலவும் அரசியலைப் புரிந்து கொள்ள இது போன்ற எழுத்துகள் உதவும். மட்டுமன்றி ஒரு சமூகத்தில் எழுத்தாளனுக்கு எந்த மாதிரியான இடம் தரப்பட்டிருக்கிறது, அது குறித்த அவனது அங்கலாய்ப்புகள், அவநம்பிக்கைகள் என்ன  என்பதை அறியவும் முடியும்.

இந்த நாவலை வாசித்த அனுபவத்தைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பதிவில் எழுதியுள்ளேன்.

[http://pitchaipathiram.blogspot.in/2006/03/blog-post.html]

*

தற்போது விட்டல் ராவின் 'மூலவரும் உற்சவரும்' என்ற நூலை வாசித்து முடித்தேன். இப்போதைய இளம் வாசகருக்கு விட்டல் ராவ் என்ற எழுத்தாளரைப் பற்றி எத்தனை தூரம் தெரியும் என்று தெரியாது. பிறப்பால் கன்னடராக இருந்தாலும் தமிழ் வழிக் கற்றலின் காரணமாக தமிழ் எழுத்தாளராக உருவாகி வந்தவர். அடிப்படையில் இவர் ஓவியரும் ஆவார். அது தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். நதிமுலம், போக்கிடம், காலவெளி, வண்ணமுகங்கள் போன்றவை இவர் எழுதிய நூல்கள்.

மட்டுமன்றி சினிமா தொடர்பாக இவர்  எழுதியுள்ள கட்டுரைகளும் அரிதானது மட்டுமன்றி சிறப்பானதும் கூட.. 'தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், நவீன கன்னட சினிமா ஆகிய இவரது சினிமா நூல்கள் முக்கியமானவை.

*

நீலபத்மநாபனின் தேரோடும் வீதியைப் போலவே விட்டல் ராவும் ஒரு நூலை எழுதியுள்ளார். மூலவரும் உற்சவரும் என்பது அந்நூலின் தலைப்பு.  எழுத்துலக அனுபவங்களையும் அதிலுள்ள அரசியல்களையும் புனைவு மொழியில் அந்த நூல் பேசுகிறது. கதை சொல்லி எவரோ மூன்று நபர்களிடம் தன்னுடைய கதையை எழுதச் சொல்லுவதைப் போல இந்த நூல் விரிகிறது. சில பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்பட்டாலும் புனைவு பாவனையில் குறிப்பிடப்படும் சில பெயர்களை உடனே எளிதாக யூகிக்க முடிகிறது. யோசனைக்குப் பின் சில பெயர்கள் பிடிபடுகின்றன. இன்னும் சிலவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

எழுதுவதோடு மட்டுமல்லாமல் அதைப் பிரசுரம் காணச் செய்வதற்காக எழுத்தாளன் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், அதிலுள்ள அவமதிப்புகள், அரசியல், புகழுரைகள், போலிப் பெருமிதங்கள் போன்றவற்றை இதன் நாயகன் 'சோமசன்மா' புனைவாக சொல்லிச் செல்கிறார்.

எழுத்துலக அனுபவம் மற்றும் அது தொடர்பான அரசியல் சார்ந்து சுவாரசியமான நூல் இது.

( மூலவரும், உற்சவரும் - அம்ருதா பதிப்பகம் - 376 பக்கங்கள் - ரூ.300·-)

**

pic courtesy: https://www.facebook.com/gkuppuswamy62/posts/1182795928490077

 

suresh kannan

Sunday, January 07, 2018

பா.ரஞ்சித் - THE CASTELESS COLLECTIVE - இசை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பு, ‘THE CASTELESS COLLECTIVE’ என்றொரு இசை நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு செல்ல பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் அலுவலகப் பணியில் சிக்கிக் கொண்ட காரணத்தால் துரதி்ர்ஷ்டமாக செல்ல இயலவில்லை.

யூ-ட்யூபில் இந்நிகழ்ச்சியின் காணொளிகள் இப்போது காணக் கிடைக்கின்றன. ராக், ராப் மற்றும் சென்னையின் பிரத்யேக இசைவடிவமான கானா ஆகியவற்றின் கலவையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த இளம்தலைமுறை இளைஞர்களின் சுயாதீன இசை முயற்சிகள் இந்த மேடையில் அருமையாக வெளிப்பட்டதை காண முடிந்தது. இந்த இசைப்பாடல்களின் அடிநாதம், சமத்துவ சமூகம், சமூகநீதி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். ஜாஸ் இசையின் மூலம் கருப்பின சமூகத்தின் இசைப்புலமையும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஓலமும் வெளிப்பட்டது. அதைப் போலவே சென்னையின் பிரத்யேகமான அடையாளங்களுள் ஒன்றான, கானா ஒரு குறிப்பிட்ட வெளியைத் தாண்டி மைய சமுகத்தை நோக்கி நகர வைக்கும் இம்மாதிரியான முயற்சிகள் அவசியமானவை.

சினிமா என்பதைத் தாண்டி ஓவியம், ஆவணப்படம், இசை என்று பல்வேறு வழிகளில் தன்னுடைய அரசியல் குரலை ஒலிக்க வைக்கும் பா.ரஞ்சித்திற்கு மனம் உவந்த பாராட்டும் நன்றியும்.

இடஒதுக்கீடு குறித்தான பாடல் ஒன்றிற்கான சுட்டி தரப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்றால் இதர பாடல்களையும் கண்டு, கேட்டு மகிழலாம்.  


suresh kannan